Last Updated : 26 Jun, 2025 09:08 PM

17  

Published : 26 Jun 2025 09:08 PM
Last Updated : 26 Jun 2025 09:08 PM

“அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரகசியம் என்ன?” - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்

கோவை: “முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்று கூறியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை. திருப்பத்தூர் மாவட்ட அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை’ என வழக்கமான அவதூறை மீண்டும் பரப்பியிருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை செயல்படுத்துவது மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தான். அதனால் தான், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும், மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகின்றன. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு இருந்த போதும் இதுதான் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்திய நிதி ஆணைய பரிந்துரைப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பகிர்ந்தளித்து வருகிறது. அதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், எந்த அளவுகோலின்படி, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டதோ, அதன்படிதான் இப்போதும் நிதி வழங்கப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக, இந்திய தேசியத்திற்கு எதிரான எண்ணத்தை தமிழ்நாட்டு மக்களிடம் விதைக்கும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு, மத்திய அரசை, முதல்வர் ஸ்டாலின் எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது முதலே, முதல்வர் ஸ்டாலினுக்கும், திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், தூக்கத்தில் கூட அதிமுக, பாஜக கூட்டணியைப் பற்றி புலம்பி தீர்த்தனர். இந்நிலையில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் 5 லட்சத்துக்கும் அதிகமான முருக பக்தர்கள் திரண்ட மாபெரும் முருக பக்தர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்பதை, அவரது திருப்பத்தூர் அரசு விழா பேச்சில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்வதாக பாஜக மீது அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக, மத அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கிற திமுகவுக்கு, மதத்தைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை.

திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. அந்த ரகசியத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா? சனாதன தர்மமான இந்து மதத்தை, கொசு போல ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு, தமிழ்நாட்டில் இந்து மதத்துக்கு ஆபத்து இல்லை என்கிறார். இதை விட வெறுப்பு அரசியல் இருக்க முடியுமா? அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கப் பார்க்கின்றனர். அது ஒருநாளும் நடக்கப் போவதில்லை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x