Published : 26 Jun 2025 04:53 PM
Last Updated : 26 Jun 2025 04:53 PM

‘அடிப்படை வசதியின்றி அவதி’ - கூமாப்பட்டி கிராமத்தின் உண்மை நிலை என்ன?

இன்ஸ்டாவின் ரீசன்ட் டிரெண்டிங் ‘கூமாப்பட்டி’ தான். ‘ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க’ என்று இளைஞர் ஒருவர் அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்துவிட்டது ‘கூமாப்பட்டி’. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில், ‘கூமாப்பட்டி ஊருக்கு வாருங்க’ என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ஓர் இளைஞர்.

அந்த வீடியோவில், “மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனித் தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்...” என்று அந்த இளைஞர் தனக்கே உரித்தான மொழியில், பேசுவது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கூமாப்பட்டியை சுற்றியுள்ள இயற்கையையும் காட்டியிருந்தார். இதனால் ஊட்டி, கொடைக்கானல், கேரளா என சுற்றுலா சென்ற மக்கள் பலரும், கூமாப்பட்டியை கூகுள் மேப்பில் தேடினர்.

இந்த நிலையில், ‘கூமாப்பட்டி சிறிய கிராமம். சுற்றுலாப் பயணிகள் யாரும் நம்பி வரவேண்டாம்’ என பொதுப் பணித் துறை அலர்ட் தந்துள்ளது. இது தெரியாமல், இன்ஸ்டா ஃபாலோயர்கள் சிலர் கூமாப்பட்டிக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வீடியோவில் இளைஞர் காட்டிய இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதி என்பதால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூமாப்பட்டியின் உண்மையான நிலை என்ன? - விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ‘கூமாப்பட்டி தனி தீவு’ என இணையத்தில் ரீல்ஸ் வைரலாகி வரும் நிலையில், அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, 6-வது மைல் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மற்றும் பூங்கா ஆகியவை உள்ளன.

மேலும், மலையில் ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனார் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், தென் திருமாலிருஞ்சோலை காட்டழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை சேதமடைந்தும், போதிய பேருந்து வசதிகளும் இல்லாமல் உள்ளது. செல்போன் டவர் இல்லாததால் அவசர உதவிக்கு கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பிளவக்கல் அணை பூங்கா கரோனா ஊரடங்கின் பொது பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் பின் திறக்கப்படாததால் உபகரணங்கள் சேதம் அடைந்து உள்ளன. பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தும் இதுவரை பணிகள் தொடங்க வில்லை.

பிளவக்கல் அணை மற்றும் பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கூமாப்பட்டியில் உள்ள வயல்வெளிகள், ஒடைகள், பிளவக்கல் அணை, கண்மாய்கள் ஆகியவற்றில் எடுத்த பழைய ரீல்ஸ் வீடியோக்களை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் கூமாப்பட்டி தற்போது ட்ரெண்டாகி இணையவாசிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அடிப்படை வசதியின்றி தாங்கள் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x