Published : 26 Jun 2025 08:25 AM
Last Updated : 26 Jun 2025 08:25 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதிமுக-வின் அடையாளமாக மாற்றிக் கொண்டவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்பி-யாக இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் அதிமுக சீட் கொடுக்கவில்லை. அப்போது தொகுதியை தந்திரமாக தேமுதிக-வுக்கு தள்ளிவிட்டதில் ராஜேந்திர பாலாஜியின் ஆலோசனையும் இருந்தது.
இதையடுத்து, ராதாகிருஷ்ணனும் அவரது ஆதரவாளர்களும் ராஜேந்திர பாலாஜியுடன் அப்போது மல்லுக்கு நின்றனர். “அடுத்த முறை சிவகாசி தொகுதியில் எப்படி ஜெயிக்கிறாய் என்று பார்க்கிறோம்” என்ற அளவுக்கு பெரிதானது இந்த மனக்கசப்பு. சிவகாசி தொகுதியில் ராதாகிருஷ்ணனின் சமூதாய ஓட்டுகள் கணிசமாக இருப்பதால் இந்த மிரட்டலுக்கு சற்றே அஞ்சினார் பாலாஜி. அதனால், முன்னெச்சரிக்கையோடு 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதிக்கு மாறினார். ஆனால், அங்கு அவரால் கரைசேர முடியவில்லை.
தோற்றாலும் ராஜபாளையம் தொகுதியில் பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்களை நடத்திய ராஜேந்திர பாலாஜி, கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொண்டார். இந்த நிலையில், சமீப காலமாக அவரது பார்வை சிவகாசி தொகுதியை நோக்கித் திரும்பி இருக்கிறது. சிவகாசியில் மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வரும் ராஜேந்திர பாலாஜி, மீண்டும் சிவகாசியில் போட்டியிட முனைப்புக்காட்டுவதாகச் சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன்” என்று தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், “2011-ல் முதல் முறையாக சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி, சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரை தோற்கடித்து அதிமுக போட்டி வேட்பாளரை ஜெயிக்கவைத்தார்கள். இதனால், அப்போதைய மாவட்டச் செயலாளரான ஆர்.பி.உதயகுமாரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்தே பாலாஜிக்கு ஏறுமுகம் தான்.
இந்த நிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2016-ல் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போன காங்கிரஸ், 2019 மக்களவை தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றது பாலாஜிக்கு சிக்கலை உண்டாக்கியது. தொகுதி தங்களுக்குக் கிடைக்காத ஆதங்கத்தில் ராதாகிருஷ்ணன் தரப்பினர் எதிர்த்து வேலை செய்ததும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தரப்பினரின் மறைமுக ஆசியுடன் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு 2021-ல் ஆஸ்தான ஜோதிடரின் அறிவுரைப்படி சிவகாசியை விட்டுவிட்டு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், மஞ்சள் சட்டை மாவீரனுக்கு ஜோதிடம் கைகொடுக்கவில்லை. இருந்தாலும், ‘மீண்டும் நான் ராஜபாளையத்தில் தான் போட்டியிடுவேன்’ என்று இத்தனை நாளும் சொல்லிக்கொண்டே இருந்தவர் இப்போது சிவகாசி பக்கம் திரும்பி இருக்கிறார்.
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி, குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது என சிவகாசியையே சுற்றிச் சுற்றி வருகிறார் பாலாஜி. சிவகாசியில் இவருக்கு சவாலாக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த 2022 இறுதியில் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். அதனால், அவரது ஆதரவாளர்கள் பழைய பகையை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் பாலாஜி மீண்டும் சிவகாசிக்கு வருகிறார். ஆனால், ராதாகிருஷ்ணன் இறந்த சமயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக நிர்வாகிகள் சகிதம் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இப்போது இதையும் சிலர் பாலாஜிக்கு எதிராக திருப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
சாந்தமான அரசியலால் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் அமைச்சர் தங்கம் தென்னரசின் அரசியல் வியூகங்களுக்கு முன்னால் இம்முறை பாலாஜியின் பாச்சா பலிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT