Last Updated : 26 Jun, 2025 08:23 AM

2  

Published : 26 Jun 2025 08:23 AM
Last Updated : 26 Jun 2025 08:23 AM

10 லட்சியம்... 4 நிச்சயம்! - கோவைக்கு திமுக போடும் கணக்கு!

கடந்த இரண்டு தேர்தல்களாக கிட்டத்தட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. அதை உடைக்க இம்முறை பலகணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. 2021-ல் கோவை மாவட்​டத்​தில் ஒரு தொகு​தி​யைக்​கூட பெற​முடி​யாத திமுக கூட்​ட​ணி, மக்​கள​வைத் தேர்​தலிலும் உள்​ளாட்சி தேர்​தலிலும் கிட்​டத்​தட்ட நூற்​றுக்கு நூறு வெற்​றியை அள்​ளியது. அதற்​கும் காரணம், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி​யின் தேர்​தல் வியூ​கங்​கள் எனச் சொல்​லப்​பட்​டது. ஆனால், அது​மட்​டுமே காரண​மாக இருந்​தால் இம்​முறை 10 தொகு​தி​களை​யும் திமுக கைப்​பற்​றி​யாக வேண்​டும். ஆனால், கோவை​யின் கள நில​வரம் அப்​படி இல்லை என்​பதே யதார்த்​தம்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த அரசி​யல் பார்​வை​யாளர்​கள், “இந்த மாவட்ட மக்​களின் அபி​மானத்​தைப் பெறு​வதற்​காக கோவைக்​கென சிறப்​புத் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது திமுக அரசு. ஆனால், அப்​படி இருந்​தும் கோவை மக்​களில் பெரும்​பகு​தி​யினர் இன்​ன​மும் அதி​முக மனநிலை​யிலேயே இருக்​கி​றார்​கள்.

இதற்​குக் காரணம், இங்கு பெரு​வாரி​யாக வசிக்​கும் கொங்கு வேளாளக் கவுண்​டர் சமூகத்​தினர். எஃப்சி பட்​டியலில் இருந்த இவர்​களை பிற்​படுத்​தப்​பட்​டோர் பட்​டியலுக்​குள் கொண்டு வந்​தது கருணாநிதி அரசு தான் என்​றாலும் இந்த மக்​கள் திமுக மீது ஏனோ பற்​று​தல் இல்​லாமல் இருக்​கி​றார்​கள். திமுக-வுக்​கென செல்​வாக்​கான முகம் யாரும் இந்த மாவட்​டத்​தில் இல்​லாமல் போனதும் இதற்கு முக்​கியக் காரணம்.

கோவை தொழில்​துறை​யில் கொங்கு வேளாளக் கவுண்​டர் சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள் பெரு​வாரி​யாக கோலோச்​சுகி​றார்​கள். தேர்​தல் நேரத்​தில் இவர்​கள் சத்​தமில்​லாமல் செய்​யும் திரைமறைவு வேலை​கள் தேர்​தல் முடிவு​களையே தலை​கீழாக மாற்​றி​விடும். 2021 தேர்​தலில் பாஜக வேட்​பாள​ரான வானதி சீனி​வாசனை கோவை தெற்​கில் ஜெயிக்​கவைக்க இவர்​கள் எடுத்​துக் கொண்ட முயற்​சிகள் ஏராளம். இவர்​கள் அனை​வ​ரு​மே, தாங்​களோ தங்​களைச் சார்ந்​தவர்​களோ தான் அரசி​யல் அதி​காரத்​தி​லும் இருக்க வேண்​டும் என நினைக்​கி​றார்​கள். அப்​படி நினைப்​பவர்​களின் ஒரே சாய்ஸ் அதி​முக-​வாகத்​தான் இருக்​கிறது.

திமுக-​விலும் தங்​கள் சமூகத்​தைச் சேர்ந்​தவர்​களே வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டாலும் எடப்​பாடி பழனி​சாமி, எஸ்​.பி.வேலுமணி, தங்​கமணி உள்​ளிட்​ட​வர்​கள் தங்​கள் சமூகத்​தின் அசைக்​க​முடி​யாத அரசி​யல் ஆளு​மை​களாக இருப்​ப​தால் அவர்​களை இவர்​கள் கொண்​டாடு​கி​றார்​கள். எது​வாக இருந்​தா​லும் நம்​மவர்​களிடம் பேசி சாதித்​துக் கொள்​ளலாம். திமுக வந்​தால் அவர்​களிடம் போய் கைகட்டி நிற்​க​முடி​யாது என்ற எண்​ண​வோட்​டம் தொழில் துறை​யில் இருக்​கும் கொங்கு வேளாளக் கவுண்​டர் சமூகத்​தினருக்கு இருக்​கிறது. கோவை அதி​முக கோட்​டை​யாக மாறிப் போனதற்கு இது தான் பிர​தான காரணம்” என்​றார்​கள்.

கோவை அதி​முக கோட்​டை​யாக இருப்​ப​தற்கு இப்​படி ஒரு காரணம் சொல்​லப்​பட்​டாலும் இம்​முறை அந்​தக் கோட்​டை​யில் ஓட்டை போட​வும் சில பல கணக்​கு​களைப் போட்டு வரு​கிறது திமுக. இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவை திமுக நிர்​வாகி​கள் சிலர், “இங்கு கொங்கு வேளாளக் கவுண்​டர்​கள் தான் வெற்றி தோல்​வியை தீர்​மானிக்​கி​றார்​கள் என்​பது ஓரளவுக்கு உண்​மை​தான். இது தெரிந்து தான் அந்த சமூகத்​தினர் கணிச​மாக வசிக்​கும் புறநகர் பகு​தி​களை விட்​டு​விட்டு நகர் பகு​திக்​குள் வரும் கோவை வடக்​கு, தெற்​கு, சிங்​காநல்​லூர், கவுண்​டம்​பாளை​யம் ஆகிய நான்கு தொகு​தி​களை இம்​முறை குறி​வைத்​திருக்​கி​றோம்.

கடந்த முறை இந்த நான்கு தொகு​தி​களி​லும் சுமார் பத்​தா​யிரத்​துக்​கும் குறை​வான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தான் திமுக தோற்​றது. இந்​தத் தொகு​தி​களில் குறிப்​பிட்ட இந்த சமூகம் தான் கணிச​மாக இருக்​கிறது என்று சொல்​ல​முடி​யாத அளவுக்கு அனைத்து சாதி​யினரும் பரவலாக வசிக்​கி​றார்​கள். திமுக ஆதரவு மலை​யாளி​கள் உள்​ளிட்ட மொழிச் சிறு​பான்​மை​யினரும் இந்​தத் தொகு​தி​களில் குறிப்​பிடும் படி​யாக இருக்​கி​றார்​கள்.

இதெல்​லாம்தான் இந்த நான்கு தொகு​தி​களி​லும் திமுக-வுக்கு கணிச​மான வாக்​கு​களை விழ​வைத்​திருக்​கிறது. இம்​முறை 10 தொகு​தி​களை​யும் வென்​றெடுக்க வேண்​டும் என்​பது தலை​மை​யின் கட்​டளை​யாக இருந்​தா​லும் குறிப்​பிட்ட இந்த நான்கு தொகு​தி​களை​யா​வது கட்​டா​யம் கைப்​பற்​றி​யாக வேண்​டும் என்ற திட்​டத்​தில் இருக்​கி​றோம்” என்றனர்.

கோவை, நீல​கிரி, திருப்​பூர், ஈரோடு, நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்​டுக்​கல் மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தில் 64-க்​கும் மேற்​பட்ட சட்​டமன்​றத் தொகு​தி​கள் உள்​ளன. இதில் 24 தொகு​தி​களில் மட்​டுமே கடந்த முறை திமுக வெற்றி பெற்​றது.

இம்​முறை இந்த மண்​டலத்​தில் முப்​பதுக்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வாகை சூட கணக்​குப் போடும் திமுக-​வினர், “கொங்கு வேளாளக் கவுண்​டர் சமூகத்​தில் பெண்​களின் கணிச​மான ஆதரவு விஜய் கட்​சிக்கு இருக்​கிறது. ஆகவே, அதி​முக கூட்​ட​ணிக்கு விழ​வேண்​டிய கொங்கு வேளாளக் கவுண்​டர் சமூகத்​துப் பெண்​களின் பெரு​வாரி​யான வாக்​கு​கள் இம்​முறை தவெக-வுக்கு போகும் என எதிர்​பார்க்​கி​றோம். எங்​கள் கணிப்பு சரி​யாக இருந்​தால் இம்​முறை கொங்கு மண்​டலத்​தி​லும் திமுக கொடி பறக்​கும்” என்​கிறார்​கள். பார்​க்​கலாம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x