Published : 26 Jun 2025 06:30 AM
Last Updated : 26 Jun 2025 06:30 AM
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நடிகரான கிருஷ்ணாவிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா பிரபலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில், ‘தீங்கிரை’ படத்தை தயாரித்த காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய 3 கட்சிகளிலும் முன்பு தகவல் தொழில் நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கமானதாக ஸ்ரீகாந்த் வாக்கு மூலமாக தெரிவித்து இருந்தார்.
இதேபோல் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் ஆதாயம் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப்பொருளை கைமாற்றியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம்: எனக்கு இரைப்பை தொடர்பான அலர்ஜி உள்ளது. இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதனால், போதைப் பொருளை பயன்படுத்த முடியாது.
நான் பயன்படுத்தியதும் இல்லை. பிரதீப் குமார், பிரசாந்த் என எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்புடன் பழகி வந்தேன். அவருடன் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளது உண்மைதான். ஆனால், நான் இதுவரை எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை. இவ்வாறு கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க கிருஷ்ணா வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் போலீஸாருக்கு ஒத்துழைப்பதாகவும் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அமைதியாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுஒருபுறம் இருக்க கடந்த மாதம் 22-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏற்கெனவே பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கிலும் அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், அவரையும் சிறையில் உள்ள ஆப்பிரிக்க இளைஞர் ஜான், சேலம் சங்ககிரி பிரதீப்குமார் உள்ளிட்டோரையும் காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சினிமா துறையைச் சேர்ந்த மேலும் சிலர் இதேப்போல் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் முன்னணி நடிகர், நடிகைகள் பெயர்களும் அடிபடுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். இந்த போதைப் பொருள் பயன்படுத்தினால் சுமார் 45 நாட்கள் வரை உடலில் இருக்கும்.
இந்த காலக்கட்டத்துக்குள் மருத்துவ பரிசோதனை நடத்தினால் அது உறுதி செய்யப்பட்டு விடும். இதற்கு பயந்தே சில நடிகர், நடிகைகள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT