Last Updated : 25 Jun, 2025 04:57 PM

7  

Published : 25 Jun 2025 04:57 PM
Last Updated : 25 Jun 2025 04:57 PM

“மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது பாஜக” - முத்தரசன்

முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை: தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜக ஒன்றிய அரசு, மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடிவரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசைதிருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசு, அதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் வெளியான தகவலின்படி 2014 முதல் 2024 வரையான பத்தாண்டு காலத்தில் வழக்கொழிந்து வரும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக இரண்டாயிரத்து 532 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. அதே சமயம் தென்னிந்திய மாநில மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்குமாக, சேர்ந்து ஒட்டுமொத்தமாக ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது . சமஸ்கிருதத்தைவிட 17 மடங்கு குறைவாகவே தென்னிந்திய மொழிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது, இதில் தமிழ் மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், புதிய கல்விக் கொள்கை, பிரதமர் கல்வி திட்டம் ஆகிய பெயர்களில் இந்தி மொழி பாட மொழியாக சேர்க்கப்பட்டு, கற்பிக்க முன் வந்தால் மட்டுமே, பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க முடியும் என நிபந்தனை விதித்து நிதி ஒதுக்க மறுத்து வருகிறது.

கீழடி தொல்லியல் ஆய்வில் கண்டறிந்த பழம் பொருட்கள், தமிழர்களின் நகர நாகரீக வாழ்வு, கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கும் முந்தைய, தொன்மை கொண்டது என்பதை ஏற்க மறுத்து, தொல்லியல் ஆய்வுக்கு பொறுப்பேற்று செயல்பட்ட இயக்குநர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை இடம் மாற்றம் செய்து வஞ்சித்துள்ளது.

இயற்கை பேரிடரை தொடர்ந்து சந்தித்து, ஏறத்தாழ ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பு இழப்புகளை சீரமைக்க, மறு வாழ்வை உறுதி செய்ய, தேசிய பேரிடர் நிதி கேட்ட தமிழ்நாடு அரசின் முறையீட்டுக்கு மதிப்பளித்து நிதி ஒதுக்கவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆண்டுக்கு, ஆண்டு வெட்டிக் குறைத்தும், வழங்கப்படும் மனித வேலை நாட்களை 50 சதவீதம் குறைத்தும் ஊரக உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது.

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜக ஒன்றிய அரசின், மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடி வரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பாஜகவின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x