Published : 25 Jun 2025 03:24 PM
Last Updated : 25 Jun 2025 03:24 PM
தருமபுரி: போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழகம் மாறி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தருமபுரியில் இன்று (ஜூன் 25-ம் தேதி) அமமுக மாவட்ட செயல் வீரர், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரில் இன்று இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. யார் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, மக்கள் இந்த ஆட்சியின் மீது கோபமடைந்துள்ளனர்.
அதேபோல, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறி வருகிறது. இந்த பொருட்களின் புழக்கத்தை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து சாலைக்கு வந்து போராடும் நிலை உள்ளது.
தமிழகத்தில் விளையும் மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மா சாகுபடி செய்த விவசாயிகள் பலர் மாமரங்களை வெட்டி அகற்றிவிட்டு மாற்று விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். ஆனால், ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல தற்போது தான் மா பிரச்சினைக்காக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.ஆர்.முருகன், மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ செல்வம், தொழில்நுட்ப அணி நிர்வாகி பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT