Published : 25 Jun 2025 02:57 PM
Last Updated : 25 Jun 2025 02:57 PM
சென்னை: “50 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, சட்டத்தின் அனுமதி இல்லாமலேயே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டணி சேர்ந்து சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “1971-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 518 இடங்களில் 352 இடங்களில் வெற்றியும், 43.68 சதவிகித வாக்குகளை பெற்றும் மக்கள் பேராதரவோடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனசங்கம் 22 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 7.3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சியாகக் கூட வர முடியவில்லை.
இந்திரா காந்தியின் முற்போக்கு நடவடிக்கைகளான 14 வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, வறுமை ஒழிப்பு போன்ற மக்கள் நலன்சார்ந்த இருபது அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நிலச் சீர்திருத்த சட்டம், தொழிலாளர் நலன், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.
இத்திட்டங்களின் காரணமாக மக்கள் பெரும் ஆதரவு வழங்கியதை அந்த தேர்தல் முடிவுகள் காட்டியது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், 1971-ல் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜூன் 12, 1975 அன்று தீர்ப்பளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த தீர்ப்புக்காக கூறப்பட்ட உப்பு சப்பில்லாத காரணத்தை எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதனை அடிப்படையாக வைத்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைநகர் டெல்லியில் ஜூன் 15, 1975 அன்று ராம்லீலா மைதான பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்திராகாந்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவர் போடுகிற உத்தரவுகளை ராணுவத்தினர் மற்றும் அரசு பணியாளர்கள், அதிகாரிகள் நிறைவேற்றக் கூடாது என்று கூறியதோடு நாடாளுமன்ற, சட்டமன்றங்களை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் காரணமாக மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜனசங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை சீர்குலைப்பதற்கு முயற்சி மேற்கொண்டார்கள். இது தேர்தல் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். பிஹார், குஜராத் மாநில முதல்வர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டது. குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று மெரார்ஜி தேசாய் உண்ணாவிரதம் இருந்தார். ரயில்வே அமைச்சராக இருந்த எல்.என்.மிஸ்ரா படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்படாமல் முடக்கப்பட்டன. இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 352-ன்படி நெருக்கடி நிலை ஜூன் 25, 1975 முதல் அமலுக்கு வந்தது.
இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை 21 மாதங்கள் நீடித்து 1977-ல் தேர்தலை நடத்தி, அதன்மூலம் இந்திரா காந்தி பதவி விலக நேரிட்டது. ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டவர்கள் எந்த இந்திரா காந்தியை சர்வாதிகாரி என்று அழைத்தார்களோ, அவரே முன்னின்று நடத்திய பாரபட்சமற்ற தேர்தலில் அவரது கட்சியும், அவரும் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் இருப்பது நிலைநாட்டப்பட்டது. நெருக்கடி நிலையில் நடந்த தவறுகளுக்கு பிற்காலத்தில் இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்ததை நாடே அறியும்.
அசாதாரண சூழலில், அரசமைப்புச் சட்டத்தின் அனுமதியோடு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அனுமதியில்லாமல் பிரதமர் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தற்போது நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தின் தூண்களாக கருதப்படுகிற நாடாளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம், தனிமனித உரிமைகள் மறுக்கப்பட்டு கடுமையான அடக்குமுறைகளுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி ஆட்சியில் நீதிமன்றத்தின் தனித்தன்மை பலகீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு எதிராக கருத்து கூறுபவர்களை பழிவாங்குவதற்காக, உபா சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது. தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தின் மூலம் மொத்த நிதியில் 60 சதவிகிதத்துக்கும் மேலாக பாஜக நிதியை திரட்டி தேர்தல் களத்தில் சாதகமான சூழலை உருவாக்கி கொள்கிறது.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில், சட்டத் திருத்தத்தின் மூலம் ,தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதியை விலக்கி விட்டு, தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதனால், தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன்மூலம், தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு, தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் பாரபட்சம் என பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
பெரும்பான்மை இந்து மக்களின் ஆதரவை திரட்டுகிற வகையில், இந்து ராஷ்ட்ரா அமைப்பது தான் பாஜகவின் நோக்கம் என்ற அடிப்படையில் காலங்காலமாக இந்தியாவில் பின்பற்றி வந்த நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மூலம் உறுதி செய்யப்பட்ட பன்முக கலாச்சாரம், மதச்சார்பின்மை, சகோதர உணர்வு, தனிமனித உரிமைகள் ஆகியவை சட்டவிரோதமாக, சட்டத்தின் அனுமதியில்லாமல் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பாஜக அரசின் துறைகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டும், சோதனைகள் நடத்தப்பட்டும் கடுமையான அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, சட்டத்தின் அனுமதி இல்லாமலேயே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டணி சேர்ந்து சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெருக்கடி நிலையை விட படுமோசமான பாசிச சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை எவரும் மறுக்க முடியாது. இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு, தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து முறியடித்துக் காட்டுவார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT