Published : 25 Jun 2025 02:06 PM
Last Updated : 25 Jun 2025 02:06 PM
திண்டிவனம்: “கூட்டணி குறித்து இப்போது சொல்லக்கூடாது. அது இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம், எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி. வித்தியாசமான கூட்டணி. வெற்றி பெறுகின்ற கூட்டணி. நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46 ஆண்டுகளாக கட்சி மற்றும் சங்கம் இரண்டையும் நான் வழிநடத்தி வருகிறேன். அந்த வகையில், சங்கத்தின் தலைவராக பு.த.அருண்மொழியும், கட்சியினுடைய தலைவராக நானும் இருந்து வருகிறோம்.
பாமகவில் 34 அமைப்புகளை துணை அமைப்புகளாக உருவாக்கி அதை வழிநடத்தி வருகிறேன். இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட இனி அவர்களை முடுக்கிவிட்டு, வேகமாக தொடரச் செய்வேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். பாமக இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறது. கூட்டணி குறித்து இப்போது சொல்லக்கூடாது. அது இன்னும் முடிவாகவில்லை.
அதேநேரம், எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி. வித்தியாசமான கூட்டணி. வெற்றி பெறுகின்ற கூட்டணி. நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள். இவர்களில் இருந்துதான் நான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பேன்.
இவர்கள்தான் பாமகவின் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சியில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு உண்டு. அதனால்தான், இந்த கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்குவேன்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT