Published : 24 Jun 2025 09:29 PM
Last Updated : 24 Jun 2025 09:29 PM
வேலூர்: “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையில் அறிக்கை விட்டுள்ளார்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இன்று (ஜூன் 24) மாலை ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை நூற்றாண்டு சேவை கொண்டது. இங்கு ரூ.197.81 கோடியில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 263 சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு, 560 படுக்கைகளும் 11 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளது. 7-வது தளத்தில் மட்டும் 10 அறுவை சிகிச்சை அரங்கம் அமையும். இதில் 3-க்கு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றவைகளுக்கு விரைவில் பொருத்தப்படும்.
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு துறைகள் இங்கு மாற்றப்படுவதுடன் புதிய துறைகள் ஏற்படுத்தப்படும். தற்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரம் இல்லாமல், எந்தவித புரிதலும் இல்லாமல் அறிக்கை விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டியுள்ளதாக காட்டமாக அறிக்கை விட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் கூறுவதை அவர் நிறுத்திவிட்டு இந்த மருத்துவமனையை அவர் நேரடியாக எப்போதும் வந்து பார்க்கலாம்.
அதற்கு எந்தவித தடையும் இல்லை. இந்த ஆட்சியில் கட்டிடம் கட்டப்பட்டு மருத்துவ பணியாளர்கள் நியமிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த நான்காண்டுகளில் மட்டும் 29,773 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத் துறை பணியாளர்கள் வரலாற்றில் வெளிப்படைத்தன்மையுடன் 43,155 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்த்து பொறாமையில் மருத்துவத் துறையின் சாதனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று அறிக்கை விட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் 12 மடங்கு விருதுகள் அதிகம் பெறப்பட்டுள்ளன. முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். பென்ட்லேண்ட் மருத்துவமனையில் மருத்துவ பணியிடம் நிரப்பவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த மருத்துவமனையை முதல்வர் தொடங்கிய 10 நிமிடத்தில் இருந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் அனுமதிக்கும் சூழல் இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என மொத்தம் 218 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துறையில் கடந்த நான்காண்டுகளில் 17 ஆயிரத்து 566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 29 ஆயிரத்து 773 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், ஏதாவது சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தால் இந்த துறையில் பணியாற்றிய அவரது சகாவுடன் வந்து ஆதாரங்களை பெற்றுச் செல்லலாம். இங்கு குழந்தைகள் அறுவை சிகிச்சை, பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு முதலில் வரவுள்ளது.
ஒன்றரை மாதத்தில் மொத்த துறையும் இங்கு செயல்படும். இந்த மருத்துவமனைக்கு பென்ட்லேண்ட் மருத்துவமனை என்ற பெயரிலே இயங்கும்,” என்றார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT