Last Updated : 24 Jun, 2025 06:30 PM

 

Published : 24 Jun 2025 06:30 PM
Last Updated : 24 Jun 2025 06:30 PM

“பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” - ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி | கோப்புப்படம்

சென்னை: “பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரக்கூடிய ஜூலை 1-ம் தேதி முதல்வர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.

அடுத்த நாள் (ஜூலை 2) அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேரணியாகச் சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க இருக்கிறோம் .ஜூலை 3-ம் தேதி தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30% நம்முடைய திமுகவில் இணையக் கூடிய வகையில் அரசியல் பணியாற்றச் சொல்லியிருக்கிறோம். ஏறத்தாழ 2 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக மக்கள் எப்போதும் எந்த ஓர் அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஒரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிறபோது, அது ஓரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழகத்துக்குரிய இயற்கையான பண்புக் கூறு என்பதை மனதில் வைத்து, இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தொடர்ச்சியாக வட மொழிக்கு அவர்கள் அதிக முக்கியத்துவத்தையும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர். இதனால் வட மொழிக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை மீண்டும் உறுதியாகியுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் மறைந்த முதல்வர் கருணாநிதி செம்மொழி அந்தஸ்த்தை உருவாக்கினார். வட மொழிக்கு இருக்க கூடிய முக்கியத்துவத்தை, மற்ற மொழிகள் உட்பட தமிழ் மொழியும் பெற முடியாமல் போயுள்ளதால்தான், தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்று கூறுகின்றோம்” என்று அவர்கள் கூறினர்.

அப்போது, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா அவமதிக்கப்பட்டதாக நிலவும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். தமிழ்நாடே கொதித்துப் போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததை திமுக மட்டுமில்லை, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி, உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்” என்றார்.

இந்த விவகாரத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, “மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்ககிறது? இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x