Last Updated : 24 Jun, 2025 05:32 PM

4  

Published : 24 Jun 2025 05:32 PM
Last Updated : 24 Jun 2025 05:32 PM

அரசு மருத்துவமனை என்ற பெயரில் கட்டிடங்களை மட்டுமே திறக்கும் திமுக ஆட்சியாளர்கள்: இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “2021-ல் திமுக ஆட்சி அமைந்தது முதல், அரசு மருத்துவமனைகள் என்ற பெயரால் கட்டிடங்களை மட்டும் திறக்க ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமலும், போதிய மருந்துகளை வழங்காமலும் உள்ள நிலையில், இந்த அரசு, மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய நோயாளிகளின் உயிரோடு விளையாடும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த திமுக அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டிட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (Multi Speciality Hospital) என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (ஜூன் 25) பொம்மை முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், மருத்துவத் துறையின் சார்பில் புதிய அரசு மருத்துவமனைகளைத் திறக்கும்போது அதற்கு உண்டான புதிய மருத்துவர்களையோ, செவிலியர்களையோ, இதர மருத்துவப் பணியாளர்களையோ நியமிப்பதில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலையில், புதிதாக துவக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களில் இருந்து சுழற்சி முறையில் அனுப்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்றால், அதில் இருதயவியல் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல், முட நீக்கியல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளும், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடர்பான தனி வார்டுகள் மற்றும் எக்ஸ்ரே அறைகள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

வேலூரில் நாளை திறக்கப்பட உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் இதுபோன்ற துறைகள், கட்டிடங்கள் பெயரளவுக்கு உள்ளன. ஆனால், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் பதவிகள் நிரப்பப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே, சேலம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனை திறக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில், முழுக்க, முழுக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தினமும் 8 மருத்துவர்கள் இங்கு சுழற்சி முறையில் அயல்பணி செய்து வருவதாகவும், திருநெல்வேலியில் புதிதாக திறக்கப்பட்ட கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து 25 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதாகவும், இதுபோலவே, கிண்டி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிசெய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2021-ல் திமுக ஆட்சி அமைந்தது முதல், அரசு மருத்துவமனைகள் என்ற பெயரால் கட்டிடங்களை மட்டும் திறக்க ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமலும், போதிய மருந்துகளை வழங்காமலும் உள்ள நிலையில், இந்த அரசு, மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய நோயாளிகளின் உயிரோடு விளையாடும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும். இதுபோன்ற அவல நிலையால்தான் உணர்ச்சிவசப்படும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தாக்கும் அவலம் நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது.

திமுகஅரசு, ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நானும், இதுகுறித்து சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் எடுத்துரைத்த பிறகும், எனக்கு பதில் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்ட துறையின் அமைச்சர் சுப்பிரமணியனிடம் ஓரிரு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில், ‘யார் கூறியது’, ‘என்ன மருந்து இல்லை’ என மிரட்டியது அனைத்து காட்சி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

‘யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை’ என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன், வாய்ப்பந்தல் போட்டு இந்த உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது. 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x