Last Updated : 23 Jun, 2025 02:55 PM

7  

Published : 23 Jun 2025 02:55 PM
Last Updated : 23 Jun 2025 02:55 PM

அறநிலையத் துறையை அரசிடமிருந்து பறிக்கும் முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “இந்து சமய அறநிலைத்துறை ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்து இமாலய சாதனைகளை புரிந்து, திருக்கோயில்களுடைய வருமானம் கடவுளின் பெயரால் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச மாட்டோம் என்று சொன்னதை மீறுகின்ற வகையில், அதில் உரையாற்றிய ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள், முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பகிரங்கமாக தமிழக பாஜகவுக்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது. பெரும் சர்ச்சைக்குள்ளான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அறநிலையத்துறையை வலியுறுத்தியதோடு, முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காப்பாற்ற வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் மாநாட்டில் கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக வரலாற்றை அறியாத அரைவேக்காடுகள் இத்தகைய கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் என்று இருந்த போதே, 1817-ல் திருக்கோயில்களின் வருமானத்தையும், நிர்வாகத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசுயின்மையில் அரசுப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் சொத்துக்கள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு, அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1925-ல் இந்து பரிபாலனச் சட்டம், 1927-ல் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டன. 1947-ல் நாடு விடுதலைக்கு பிறகு 1951-ல் இந்து சமய அறக்கொடைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சட்டம் பல திருத்தங்களுடன் தமிழ்நாடு இந்து சமய அறக் கொடைகள் சட்டம் 1960 ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்தது.

இதன்மூலம் இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்காக தனியாக இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர் சி.பி. ராமசாமி ஐயர் பொறுப்பேற்று செயல்பட்டதை இன்றைய பாஜகவினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து சமய அறநிலைத்துறை ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்து இமாலய சாதனைகளை புரிந்து, திருக்கோயில்களுடைய வருமானம் கடவுளின் பெயரால் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன். கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் நிர்வாகத்தின் கீழ் ஆன்மிகப் புரட்சியே நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 36,425 கோயில்கள் மற்றும் 56 மடங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, மக்கள் பேராதரவுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது.

186 கோடி செலவில் 93 திருக்கோயில்களில் புதிய ராஜ கோபுரங்கள், ரூபாய் 350 கோடி செலவில் 87 புதிய திருமண மண்டபங்கள், ரூபாய் 131 கோடியில் 147 புதிய அன்னதான கூடங்கள் என தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் ஏழை, எளிய மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நற்பணிகள் நாள்தோறும் நடைபெற்று நாடே பாராட்டி வருகிறது. இதுவரை 3118 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது. 7598 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதன்மூலம் ரூபாய் 7689 கோடி மதிப்புள்ள சொத்துகள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை சகித்துக் கொள்ள முடியாத பாஜக பரிவாரங்கள் இந்து முன்னணி என்கிற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் அப்பட்டமான அரசியல் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். அரசியலையும், மதத்தையும் கலந்து தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பாஜக, தமிழ்நாட்டில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள மக்களை பாசிச வலையில் சிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் இரையாக மாட்டார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெற்ற உரிமையை நிறைவேற்றுவதை தடுக்கிற வகையில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருக்கிற ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தமிழ்க் கடவுள் முருகன் பெயரை உச்சரிப்பதற்குக் கூட தகுதியற்றவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை மதிக்காமல் அதற்கு தடையாக இருக்கும் இந்து மதத்தின் துரோகிகள். இவர்கள் இந்து மதத்தை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது ?

இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கருதாதவர்களை இந்து சமய விரோதிகள் என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது ? இத்தகைய பாசிச மக்கள் விரோத பாஜகவிடமிருந்து இந்து மதத்தையும், தமிழ்க் கடவுள் முருகனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதை அனைவரும் உணர வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதை முறியடிக்க சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x