Last Updated : 23 Jun, 2025 08:25 AM

11  

Published : 23 Jun 2025 08:25 AM
Last Updated : 23 Jun 2025 08:25 AM

“மனநிறைவு இல்லை என்றாலும் மக்களுக்காக கூட்டணியில் தொடர்கிறோம்!” - தடதடக்கும் தவாக தலைவர் வேல்முருகன் நேர்காணல்

தவெக தலைவர் நடிகர் விஜய் மாணவிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரத்தில் தவெக-வினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் இடையில் வெடித்த மோதல் இன்னும் நின்றபாடில்லை. மேடை கண்ட இடமெங்கும் தவெக-வினருக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். பதிலுக்கு தவெக தம்பிகளும் சமூகவலைதளங்களில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக வேல்முருகனிடம் பேசினோம்.

உங்களுடைய தாய்க் கட்சியான பாமக-வில் நடக்கும் தந்தை - மகன் மோதலுக்கு உண்மையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

உண்​மை​யான காரணம் உங்​களுக்​கோ, எனக்​கோ, யாருக்​கும் தெரிய வாய்ப்​பில்​லை. அது அப்​பா, மகன் இரு​வ​ருக்கு மட்​டுமே தெரிந்த விட​யம்.

பாமக-வில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு பணம் தான் பிரதான காரணம் என்கிறார்களே..?

அது அவர்​கள் இரு​வ​ருக்​கும் மட்​டும் தான் தெரிந்​தது என்​பதும் ஊரறிந்த ஒன்​று.

உங்களை மீண்டும் பாமக-வில் இணைத்து கட்சியை பலப்படுத்த ராமதாஸ் முயற்சித்ததாகவும் அதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டதாகவும் சொல்கிறார்களே..?

அப்​படி ஒரு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்​லை.

திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் சொல்கிறாரே?

ஒவ்​வொரு கட்​சி​யும் ஏற்​கெனவே பெற்ற தொகு​தி​களைக் காட்​டிலும் கூடு​தலாகக் கேட்​பது இயல்​பானது. அப்​போது தான் கட்​சிகள் வளர முடி​யும். அதன் மூலம் கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களுக்​கும் வாய்ப்பு கொடுக்​க​முடி​யும் என்ற அடிப்​படை​யில் பிர​தானக் கட்​சிகளிடம் கூடு​தல் தொகு​தி​களை கேட்​டுப் பெறு​வது என்​பது ஏற்​கெனவே உள்ள வழக்​கம் தான்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக குறைக்காது என செல்வப்பெருந்தகை சொல்லி இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது திமுக மீதான செல்​வப்​பெருந்​தகை​யின் மிகப்​பெரிய நம்​பிக்​கை​யைக் காட்​டு​கிறது.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் திடீரென திருமாவளவனை சந்தித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஓட்​டல்​களிலோ, விடு​தி​களிலோ அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் அரு​கருகே உள்ள அறை​களில் தங்​கும் போது, மாற்​றுக் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​துப் பேசுவது தமிழக அரசி​யல் வரலாற்​றில் காலங்​கால​மாக உள்ள வழக்​கம் தான். அந்​தவகை​யில் திரு​மாவளவன் - வைகைச்​செல்​வனின் இயல்​பான சந்​திப்பை வைத்து திமுக கூட்​ட​ணி​யில் இருந்து திருமா வெளி​யேறுகி​றார் என்று பேசுவது நியாயமில்​லை. அதற்கு அவரே மறுப்​பும் தெரி​வித்​திருக்​கி​றார். திரு​மாவளவனின் அந்​தக் கருத்தை நாம் ஏற்​றுக் கொள்​ளலாம்.

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்திருப்பதாக வைகைச்செல்வன் சொல்கிறாரே?

அது அவரது ஆசை. ஓட்டை விழ​வேண்​டும் என்​பது அதி​முக-​வின் எதிர்​பார்ப்​பு. கோட்​டையைப் பிடிக்க வைகைச்​செல்​வன் கண்​ணுக்​குத் தெரிந்த ஓட்டை வழி எங்​கள் கண்​களுக்​குத் தெரிய​வில்​லை​யே.

கூட்டணியில் பாஜக இருப்பதால் தான் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குப் போக யோசிக்கிறார் என்பதை ஏற்கிறீர்களா?

இதை திரு​மாவளவனிடம் தான் கேட்​கவேண்​டும்.

இத்தனை நாளும் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, இப்போது அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றெல்லாம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்குவது அரசியல் ஆதாயத்துக்காகத்தானே..?

வேல்​முரு​கன் எந்த ஆதா​யத்​தை​யும் எதிர்​நோக்கி அரசி​யல் செய்​வது கிடை​யாது. கலைக்​கல்​லூரி, சாலை வசதி என தொகுதி மக்​களின் தேவையறிந்து அதற்​கேற்ற வகை​யில் சட்​டமன்​றத்​தில் அரசுக்கு அழுத்​தம் கொடுத்து பெற்​றுக் கொடுப்​பது தான் எனக்கு வாக்​களித்த மக்​களுக்கு நான் செய்​யும் கடமை. அதைத் தான் செய்து வரு​கிறேன்.

திராவிடக் கட்சிகளால் தமிழகம் பயனடைந்திருப்பதை மறுக்க முடியாது என நீங்கள் பேசி இருக்கிறீர்களே..?

ஆம், திமுக, அதி​முக என இரண்டு கட்​சி​களின் ஆட்​சி​யிலும் மருத்​து​வக் கல்​லூரி, கலைக் கல்​லூரி, சாலை​கள், மேம்​பாலங்​கள் என தமி​ழ​கத்​திற்கு பல நன்​மை​கள் ஏற்​பட்​டிருக்​கிறது. அதைத் தான் நான் பேசி​யிருக்​கிறேன்.

2026-ல், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் எனச் சொல்லி இருக்கிறாரே அன்புமணி?

ஒவ்​வொரு முறை​யும் அரசி​யல் கட்​சிகள் தாங்​கள் அங்​கம் வகிக்​கும் கூட்​டணி தொடர்​பாக இப்​படி பேசுவது இயல்​பான ஒன்​று​தான். ஆனால், அவர்​கள் சொன்​னபடி நடந்​திருக்​கிறதா என்​ப​தைத் தான் ஆய்​வுசெய்ய வேண்​டும்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அருகில் நின்று தவெக தலைவர் நடிகர் விஜய் படமெடுத்துக் கொண்டதை இத்தனை பூதாகரமாக்க வேண்டுமா?

பூதாகர​மாக்​கிய​வர்​களிடமே அதை விட்​டு​விடு​கிறேன்.

நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை விமர்சனம் செய்திருக்கிறதே தவெக?

சுபாஷ் சந்​திர​போஸ் அவர்​களை தலை​வ​ராக ஏற்​றுக்​கொண்ட ஃபார்​வர்டு பிளாக் கட்சி தொடங்கி தொல்​.​திரு​மாவளவன் மற்​றும் நான் உள்​ளிட்ட பலரும் தனி​யாக அரசி​யல் கட்​சிகளை தொடங்​கி, தனிச்​சின்​னம் கிடைக்​காத போது, பெரிய கட்​சி​களின் சின்​னங்​களில் போட்​டி​யிட்​டு, சட்​டமன்​றம் மற்​றும் மக்​களவைக்​குச் சென்று மக்​கள் பணி ஆற்​றி​யுள்​ளோம். அதன்​படி சட்​டப் பேரவை மற்​றும் மக்​களவைக்​குச் சென்று பணி​யாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக எனது முன்​னோர்​கள் பின்​பற்றிய வழியைத் தான் நான் பின்​பற்​றி​யுள்​ளேன். இதில் எந்​தத் தவறும் இல்​லை. என்​னை​விட பெரிய கட்​சிகள் எல்​லாம்​கூட இந்த வழி​முறையை பின்​பற்​றி​யுள்​ளனர்.

ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் உறுப்பினராகி அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சரி என நினைக்கிறீர்களா?

இதற்​கான பதிலை ஏற்​கெனவே சொல்​லி​விட்​டேன்
.
இந்த முறையும் உதயசூரியனில் தான் போட்டியிட வேண்டும் என திமுக சொன்னால் என்ன செய்வீர்கள்?

சொல்​லட்​டும்​... அப்​புறம் பார்க்​கலாம்.

விஜய்யை மேடைகளில் தாக்குவதற்கு திமுக உங்களை ஆயுதமாக பயன்படுத்துவதாக சொல்கிறார்களே?

திமுக அல்ல, எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யும் என்னை ஆயுத​மாக பயன்​படுத்த முடி​யாது. நான் தமிழ்த் தேசிய தளத்​தில் வளர்ந்து வருபவன். என்னை எவராலும் வளைக்க முடி​யாது. பிறரது எண்​ணங்​களை பேசுகின்ற ஆளாக​வும் என்னை மாற்ற முடி​யாது.

ஆட்சிக்கு எதிரான அதிருப்திகள் இருப்பதால் இம்முறை திமுக-வுக்கு தேர்தல் களம் அத்தனை சுலபமாக இருக்காது என்று சொல்வதை ஏற்கிறீர்களா?

அப்​படி​யில்​லை... தமி​ழ​கத்​தில் நான்​கு​முனை போட்டி ஏற்​படு​வதற்​கான சூழல் உள்​ளது. அப்​படி நான்கு அணி​களாக போட்​டி​யிடு​கிற​போது, திமுக தலை​மையி​லான கூட்​டணி வலு​வான மதச்​சார்​பற்ற மக்​கள் கூட்​டணி என்​ப​தால், இக்​கூட்​டணி வெற்​றி​பெறு​வதற்​கான வாய்ப்பு உள்​ளது.

இந்தத் தேர்தலிலும் தோற்றுப் போனால் அதிமுக-வுக்கும் பழனிசாமிக்கும் எதிர்காலம் இல்லை என்கிறார்களே..?

அப்​படிக் கூற​முடி​யாது. அலெக்​சாண்​டர் 17 முறை படையெடுத்து தோல்வி கண்​டு, பின்​னர் வென்ற வரலாற்றை நாம் படித்​திருக்​கி​றோம். ஓரிரு தேர்​தல்​களில் தோற்​ப​தால் அந்​தக் கட்சி மீண்​டும் எழாது எனக் கூறு​வ​தில் எனக்கு உடன்​பாடில்​லை. நேர்​மை​யாக உழைத்து மக்​கள் பணி​யாற்​றி​னால் மக்​கள் அதற்​குரிய அங்​கீ​காரத்தை வழங்​கு​வர். இது அதி​முக-வுக்கு மட்​டுமல்ல. அனைத்து அரசி​யல் கட்​சிகளுக்​கும் பொருந்​தும். 14 ஆண்​டு​கள் ஆட்​சி​யில் இல்​லாத திமுக மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்த வரலாறை மறந்​து​விடக் கூடாது.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கே ஆத்ம திருப்தியுடன் இருப்பதாக உங்களால் சொல்லமுடியுமா?

மக்​களுக்​கான பிரச்​சினை​களில், ஆளும்​கட்​சி​யுடன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு சில கோப​தாபங்​கள் இருக்​கத் தான் செய்​யும். எனக்​கு, சாதி​வாரி கணக்​கெடுப்பை தமிழக அரசு நடத்​த​வில்லை என்ற கோப​முண்​டு. ஈழத்​தில் நடை​பெற்ற இனப்​படு​கொலை தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் தனி தீர்​மானம் இயற்​ற​வில்லை என்ற கோபமிருக்​கிறது. ஈழத்​தில் பொது​வாக்​கெடுப்பு நடத்த மத்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைக்கு தமிழக அரசு செவி​சாய்க்​க​வில்லை என்ற கோபமிருக்​கிறது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் வசித்து வந்த பூர்​வகுடி மக்​களின் இருப்​பிடத்தை இடித்​து, அவற்றை பன்​னாட்டு நிறு​வனங்​களிடம் அளித்​திருப்​ப​தி​லும் மாற்​றுக் கருத்து உண்​டு. இதே​போன்று திருச்​செந்​தூர் கோயில் குட​முழுக்​கை​யும், அர்ச்​சனையை​யும் தமி​ழில் தான் நடத்​தவேண்​டும் என சட்​டப்​பேர​வை​யில் பேசினேன். ஆனால் எனது கோரிக்​கைக்கு மாறாக, தமி​ழிலும் குட​முழுக்கு நடத்​தப்​படும் என்ற அமைச்​சர் சேகர் பாபு​வின் அறி​விப்​பில் எனக்கு உடன்​பாடில்​லை.

எனவே, ஆளும் கட்​சி​யுடன், கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மாற்​றுக் கருத்து இருக்​கத் தான் செய்​யும். ஆனால் அதேசம​யம், பாஜக என்ற மக்​கள் விரோத கட்சி தமி​ழ​கத்​தில் கூட்​டணி அமைத்​து, தமிழ்​நாட்​டின் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​றி​விடக் கூடாது என்ற ஒற்​றைப் புள்​ளி​யில், மனக்​கசப்பை மறந்​து, மதச்​சார்​பற்ற மக்​களுக்​காக நாங்​கள் இந்த கூட்​டணி தொடர​வேண்​டும் என விரும்​பு​கி​றோம். எனவே, கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மன நிறைவு இல்லை என்​றாலும் மக்​களுக்​காக இணைந்து செயல்​படு​கி​றோம்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்கிறார் அமித் ஷா. ஆனால், கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை என்கிறாரே இபிஎஸ்?

அவ்​விரு கட்​சிகளுக்கு இடையி​லான குடுமிபிடி சண்டை தேர்​தல் நெருக்​கத்​தில் மாறலாம்.

கூட்டணி ஆட்சி விவகாரத்தை வைத்தே தேர்தல் நெருக்கத்தில் பாஜக அணியைவிட்டு வெளியேறி தவெக-வுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்கிறார்களே..?

இப்​போது அதுகுறித்து உறு​தி​யாக, இறு​தி​யாக எதை​யும் கூற​முடி​யாது.

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் இபிஎஸ் நிச்சயம் முதலமைச்சர் என்கிறார்களே அரசியல் நோக்கர்கள்?

பல அரசி​யல் நோக்​கர்​களின் கருத்​துகளும், கருத்​துக் கணிப்​பு​களும் பொய்த்​துப் போயிருக்​கிறது. ஜனநாயகத்​தில் மக்​கள் தான் எஜமானர்​கள். அவர்​கள் வாக்​களித்து சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபித்த பின்​னர் தான் எதை​யும் உறு​தி​யாகச் சொல்ல முடி​யும்.

ஒருவேளை, திமுக-வுடனான கூட்டணி முறிந்து போனால் தவாக-வின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி என்​பது மக்​களுக்​கானது. எங்​களது தேர்​தல் அரசி​யல் பங்​களிப்பு என்​பது 10 சதவீதமே. சாமானிய மக்​களின் குரலாக ஒலிப்​பதும், சாமானிய மக்​களுக்கு ஏதி​ரான ஆதிக்க சக்​தி​களை எதிர்த்​துப் போராடி நியா​யம் பெற்​றுத் தரு​வதும் தான் எங்​கள் கொள்​கை. அதனால் நாங்​கள் தேர்​தல் அரசி​யல் குறித்து அதி​கம் அலட்​டிக் கொள்​வ​தில்​லை. தேர்​தல் காலத்​தில் அரசி​யல் நிலைப்​பாடு குறித்து முடி​வெடுப்​போம். அது​வரை தமிழ் மக்​களுக்​காக குரல் கொடுப்​போம். தேர்​தல் அரசி​யலில் வாய்ப்​புக் கிடைத்​தால் சட்​டப்​பேர​வை​யில் எடுத்​துரைப்​போம்.

முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி பாஜக அணிக்கு ஆதரவு திரட்டுவதை வேல்முருகனாக எப்படி பார்க்கிறீர்கள்?

இத்​தனை ஆண்​டு​கள் இல்​லாத விதமாக இப்​போது முரு​கனை வழிபடு​வதன் மூலம் கோடிக்​கணக்​கான முருக பக்​தர்​களை தன் பக்​கம் இழுப்​ப​தற்​கான அரசி​யல் நாடகத்தை அரங்​கேற்​றுகிறது பாஜக. இது ஏற்​புடையதல்ல.

ஒரு சில அதிகாரிகள் இந்த அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டு இன்னும் அப்படியே இருக்கிறதா?

அப்​படியே தான் உள்​ளது. பல அதி​காரி​கள் தன்​னாட்சி நடத்​திக் கொண்​டிருக்​கி​றார்​கள். நான் முன்பு சொன்​னது போல ஓர் அதி​காரி கைதும் செய்​யப்​பட்​டிருக்​கிறாரே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x