Published : 21 Jun 2025 04:58 PM
Last Updated : 21 Jun 2025 04:58 PM
திருநெல்வேலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். தற்போது அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட மீனவர் பிரதிநிதிகளுடன் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமாரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அப்போது ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து பலர் ஈரான் நாட்டின் தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரான் போர் பிரச்சினையால் அங்கு பணி செய்யும் தமிழக மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.
உவரி பகுதியை சேர்ந்த 36 பேர், ஈரானில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராதாபுரம், திசையன்விளை வட்டாட்சியர்கள் மூலம் ஈரானில் சிக்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரானில் உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். ஈரான் பகுதியில் போர் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தாயகம் அழைத்து வர முதல்வர் தயாராக உள்ளார். கிஸ் தீவில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க அயலக வாரியத்தினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி மட்டுமின்றி பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஈரானில் இருப்பதால் இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வரின் தனிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மூலம் ஆன்லைன் மூலம் ஈரானில் இருக்கும் தமிழர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.” என்று பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT