Last Updated : 21 Jun, 2025 04:27 PM

3  

Published : 21 Jun 2025 04:27 PM
Last Updated : 21 Jun 2025 04:27 PM

‘ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல; முன்னேற்றத்துக்கான கருவி’ - அன்பில் மகேஸ்

சென்னை: “ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல, அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது,” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல - அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ தொந்தரவாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிப்பதற்காக கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது.

ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடியினருடையதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக அது ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இது மொழி பற்றியது அல்ல - இது கட்டுப்பாட்டைப் பற்றியது. திமுகவில், தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற்காகவும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மொழிகளும் கிடைக்கின்றன. ஏனென்றால் எதற்கும் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஒரு ஏணியாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது'' எனத் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை.

காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும். அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது” எனத் தெரிவித்தது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x