Published : 21 Jun 2025 09:55 AM
Last Updated : 21 Jun 2025 09:55 AM
ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடித்த அடி மறைவதற்குள் பாஜக மையக் குழு நிர்வாகிகள் கூட்டத்தை அதே மதுரையில் கூட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பாஜக வேட்பாளர்களை தயார் செய்யுங்கள்” எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். இதை மதுரையில் வைத்து சொல்லி இருப்பது தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி இருப்பதால் கொங்கு மண்டலத்தில் பாஜக-வுக்கு இயல்பாகவே செல்வாக்கு கூடி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக, அதற்காகவே தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் முக்குலத்தோர் சமூகத்தின் முகங்களாக தங்களது கூட்டணிக்குள் இழுத்துப் போட்டு வருகிறது.
இந்த நிலையில், தென் மாவட்ட தொகுதிகளில் கணிசமான இடங்களில் இம்முறை பாஜக கால்பதிக்க நினைக்கிறது. அதிலும் குறிப்பாக, தென்கோடியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு இருக்கும் செல்வாக்கை தகர்த்து அதிமுக பலத்துடன் அங்கெல்லாம் கொடிநாட்ட துடிக்கிறது பாஜக. இதையெல்லாம் மனதில் வைத்தே 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தயார் செய்யுங்கள் என மதுரையில் வைத்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா என்பவர்கள், இந்து முன்னணியால் மதுரையில் நடத்தப்படும் முருக பக்தர்கள் மாநாடு கூட இதற்கான ஓர் ஒருங்கிணைப்பு முயற்சி தான் என்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவு மதுரை மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான முத்துக்குமார், “2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தலைமை, கூட்டணியை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. முடியவே முடியாது என்று சொல்லப்பட்ட டெல்லியையே பாஜக கைப்பற்றி இருக்கிறது. அப்படித்தான் தமிழ்நாட்டையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த மாயையை உடைத்து இம்முறை தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பாருங்கள்.
மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் நாங்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். மதுரை தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தோம். அப்போது நாங்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், மதுரை தெற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், காரைக்குடி, மானாமதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தென்காசி, போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை, பழனி உள்ளிட்ட தொகுதிகள் எங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.
இதில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடி, கோவில்பட்டி, காரைக்குடி, மேலூர் தொகுதிகளை தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு பாஜக விட்டுக் கொடுக்கலாம். இம்முறை தென் மாவட்டங்களில் அதிமுக துணையுடன் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது தான் அமித் ஷா பிளான். அதனால் தான் மதுரையில் மையக் குழு கூட்டத்தைப் போட்டு 50 தொகுதி கணக்கைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இனியும் வருவார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக வந்திருப்பதும் இப்போது எங்களுக்கு கூடுதல் பலம்” என்றார்.
அமித் ஷாவின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய மதுரை திமுக நிர்வாகிகளோ, “நாங்கள் தேர்தலுக்காக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டவில்லை. ஒரு மாற்றத்துக்காகத்தான் இங்கு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. எங்களுக்கு எதிராக மதுரையில் மட்டுமல்ல... வேறு எந்த ஊரில் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசனைகளை அள்ளி வழங்கினாலும் பாஜக-வால் நினைத்ததை சாதிக்க முடியாது. போட்டி எங்களுக்கும் அதிமுக-வுக்குமானதாகத் தான் இருக்குமே தவிர பாஜக-வுக்கெல்லாம் இங்கு வேலையே இல்லை” என்கிறார்கள்.
அதிமுக-வினரோ, “ஆளும் கட்சி என்ற மமதையில் திமுக-வினர் அப்படி பேசுகிறார்கள். கடந்த தேர்தல்களை வைத்து அவர்கள் சில கணக்குகளைப் போடுகிறார்கள். ஆனால், கள யதார்த்தம் அப்படி இல்லை. திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்தக் கோபம் வாக்குகளாக மாறும்போது கடந்த முறை 10-க்கு ஐந்து தொகுதிகளை வென்ற மதுரை மாவட்டத்தில் இம்முறை 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே அள்ளும். இதுதான் எல்லா மாவட்ட நிலவரமும்” என்கிறார்கள். அரசியல் திருப்பங்களுக்குப் பேர் போன மதுரைக்கு வந்து அமித் ஷா கட்சியினருக்கு சில கணக்குகளை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அது எப்படி கைகூடி வருகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT