Published : 20 Jun 2025 04:39 AM
Last Updated : 20 Jun 2025 04:39 AM
சென்னை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு என்றும், அங்கு அரசியல் இருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதையடு்த்து ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும், அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து விட்டதாகவும் கூறி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நயினார் நாகேந்திரன் நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜரானார். அப்போது நயினார் நாகேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், டி.ராஜா, கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
ராபர்ட் புரூஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சீனிவாஸ் ஆஜராகி நயினார் நாகேந்திரன் தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதன்பிறகு நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக இ்ந்த வழக்கின் ஆவணங்கள் தொடர்பாக சாட்சியம் அளித்தார். அப்போது இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சான்றொப்பம் செய்யப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ராபர்ட் புரூஸ் தரப்பி்ல் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கி்ல் நயினார் நாகேந்திரனை குறுக்கு விசாரணை செய்வதற்காக நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவி்ட்டார்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் நடைபெற உள்ள மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, அது அரசியல் மாநாடு என்ற திமுகவின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். மதுரையில் நடைபெறவிருப்பது உண்மையான முருக பக்தர்களின் மாநாடு. சில மாதங்களுக்கு முன்பாக பக்தியே இல்லாதவர்கள் பழநியில் மாநாடு நடத்தினர்.
ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு. அங்கு அரசியல் இருக்காது. எந்தவொரு அரசியலும் அங்கு பேசமாட்டோம். இந்த மாநாட்டுக்காக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் மதுரைக்கு வரவுள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை மத்திய அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார். தேர்தல் முடிந்தபிறகும் அவர் தமிழகம் வருவார், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT