Published : 19 Jun 2025 08:15 PM
Last Updated : 19 Jun 2025 08:15 PM
தேவகோட்டை: “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கொடுக்க இன்று (ஜூன் 19) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்துக்கள், இந்து இயக்கங்கள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆறு படை வீடுகளை ஒரே இடத்தில் பக்தர்கள் பூஜிக்க ஏற்பாடு செய்தோம். அதற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுத்தனர். நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
திமுக கூட்டணியினர் நாத்திக கூட்டணி. நக்கல் சிந்தனை உள்ளவர்கள், அதனால் ஏதாவது சொல்லி கொண்டே தான் இருப்பர். தமிழகத்தில் அதிக கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தியதாக கூறுகின்றனர். இதில் அரசு எவ்வளவு செலவு செய்தது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். முருக பக்தர்கள் மாநாடு பழநியில் நடத்தினார்கள். அது யாருடைய பணம்? சேகர்பாபு கொடுத்தாரா? முதல்வர் கொடுத்தாரா?
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் திரைப்பட பிரபலங்கள் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகின்றனர். ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரே சமயத்தில் 5 லட்சம் பேர் கந்தசஷ்டி கவசம் பாட உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT