Published : 19 Jun 2025 06:59 PM
Last Updated : 19 Jun 2025 06:59 PM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும், மோதல்களும், முரண்பாடுகளும் இல்லை.
ஆனால், இந்த மலையில் பல நூற்றண்டுகளாக இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் தர்கா மலை உச்சியில் இருக்கிறது. இந்துக்கள் வழிபாடு செய்யும் காசிவிஸ்வநாதர் கோயிலும் மலை உச்சியில் இருக்கிறது. இருதரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்கின்றனர். மலைக்கு அடியில் பழனியாண்டவர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இருக்கிறது.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சில மதவாத அமைப்புகள் தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலேயே பகையை வளர்க்க முயற்சிக்கின்றனர். அண்மைக் காலமாக இது தமிழகத்தில் பேசும்பொருளாக மாறி இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் திருப்பரங்குன்றம் வருகை தந்தேன்.
முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கும் தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால், நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலையேற முடியாத சூழலில் அடிவாரத்திலேயே இரு தரப்பினரையும் சந்தித்து பேசியதில் நல்லிணக்கத்தோடு வாழ்வதாக தெரிவித்தனர்.
மதவாத சக்திகள் இப்பிரச்சினையை பெரிதாக்க கூடாது. தமிழகத்தில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலையில் மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT