Published : 18 Jun 2025 08:16 AM
Last Updated : 18 Jun 2025 08:16 AM
தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார்.
ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் தளராத மனிதர், அடுத்ததாக அண்ணாச்சியின் அரவணைப்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட இப்போது சத்தமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட திமுக-வினர் சிலர், “தனுஷ் எம்.குமாரின் தந்தையான தனுஷ்கோடி எம்ஜிஆர் காலத்தில் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தவர். அப்போதிருந்தே கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சிக்கு நெருக்கமாக இருந்த தனுஷ்கோடி, அண்ணாச்சி திமுக-வுக்கு புலம்பெயர்ந்த பிறகு தானும் திமுக-வுக்கு வந்தவர். விருதுநகர் மாவட்ட திமுக-வில் அதிகாரப் புள்ளியாக அண்ணாச்சி அவதாரமெடுத்த பிறகு பரம்பரை திமுக-காரர்களான வி.பி.ராஜன் உள்ளிட்டவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அதிமுக நண்பர்களையும் அவர்களது வாரிசுகளையும் முன்னுக்குக் கொண்டு வந்தார். அப்படிக் கொண்டு வரப்பட்டவர் தான் தனுஷ் எம்.குமார்.
தனுஷ் எம்.குமார் கடந்த 15 ஆண்டுகளாக விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். 2024-ல் அவருக்கு மீண்டும் எம்பி சீட் கிடைக்காத நிலையில், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில துணைச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்தார் அண்ணாச்சி. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அண்ணாச்சி ஆதரவில் தனுஷ் எம்.குமார் காய்நகர்த்திய போது அந்த மாவட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. உட்கட்சித் தேர்தலை எதிர்த்து சிலர் நீதிமன்றம் வரைக்கும் போனார்கள்.
இதனால் அப்போது குமாரால் மாவட்டச் செயலாளர் ஆகமுடியவில்லை. இந்த நிலையில் அண்மையில், வாசுதேவநல்லூர் தொகுதியின் மேலிடப் பார்வைளாராக தனுஷ் எம்.குமாரை நியமித்திருக்கிறது திமுக தலைமை. அதை வைத்துக் கொண்டு அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வழக்கம் போல அண்ணாச்சி தயவுடன் தீவிர களப்பணி ஆற்றி வருகிறார்” என்றார்கள்.
வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருக்கிறீர்களா என தனுஷ் எம்.குமாரிடம் கேட்டதற்கு, “தென்காசி தொகுதி எம்பி-யாக பணியாற்றும் வாய்ப்பை முதல்வர் எனக்கு அளித்தார். தற்போது விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில துணைச் செயலாளர், வாசுதேவநல்லூர் தொகுதி மேலிடப் பார்வையாளர் பொறுப்புகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் வழிகாட்டுதலில் கட்சிப் பணியாற்றி வருகிறேன்.
கடந்த 4 மாதங்களாக வாசுதேவநல்லூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பூத் கமிட்டிகளை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். வாசுதேவநல்லூரில் திமுக வெற்றிபெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் அங்கு திமுக-வை ஜெயிக்க வைப்பதே எனது முதல் வேலை. மற்றபடி, அங்கே நான் போட்டியிடுவேனா என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மதிமுக தங்களின் சிட்டிங் தொகுதியான வாசுதேவநல்லூரை திமுக-வுக்கு விட்டுக் கொடுக்குமா... அப்படியே விட்டுக் கொடுத்தாலும், மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதற்கே தனுஷ் எம்.குமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தென்காசி திமுக-வினர் வாசுதேவநல்லூரில் அவரை ஜெயிக்க வைப்பார்களா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT