Published : 17 Jun 2025 01:56 PM
Last Updated : 17 Jun 2025 01:56 PM
கோவில்பட்டி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள், ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி விழுந்து புற்களில் தீப்பற்றி எரிவதை பார்த்து கடம்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் உடனே நிறுத்தப்பட்டது.

மேலும் பெட்டிகளை ஆய்வு செய்ததில் 17-வது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து ரயில்வே இருப்புப் பாதையில் உயர் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சரக்கு ரயில் பெட்டியில் ஏறி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத், விருதுநகர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைப்பு பணி நடந்தது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இருப்பு பாதை உயிர் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT