Published : 17 Jun 2025 08:29 AM
Last Updated : 17 Jun 2025 08:29 AM
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை. பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியையும் இம்முறை கட்டாயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டுள்ள முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இழுப்பு வேலைகளை செந்தில் பாலாஜி ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், கோவை தெற்கில் இம்முறை திமுக-வே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். கடைசியாக 2011-ல் கோவை தெற்கில் திமுக போட்டியிட்டது. அப்போது இங்கு களம்கண்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக-வின் சேலஞ்சர் துரைசாமியிடம் தோற்றுப் போனார். இதனால், 2016, 2021 தேர்தல்களில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது திமுக. இந்த இரண்டு தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரான மயூரா எஸ்.ஜெயக்குமார் இங்கு போட்டியிட்டார். இரண்டு முறையும் அவரால் கரை சேரமுடியவில்லை.
கடந்த தேர்தலில் வானதி சீனிவாசனிடம் தோற்றுப் போன மயூரா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரண்டாமிடத்தை தொட்டதால் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் கோவை தெற்கில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன் உள்ளிட்டோர் கோவை தெற்கை குறிவைத்து ஆயத்தப் பணிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “2021-ல் மாநிலம் முழுவதும் திமுக ஆதரவு அலை வீசியது. அப்போது கோவை தெற்கிலும் திமுக-வே போட்டியிட விரும்பியது. ஆனால், காங்கிரஸ் தலைமை குறிப்பிட்டுக் கேட்டதால் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், தொகுதியை கேட்டு வாங்கியவர்கள் வேட்பாளரை ஜெயிக்கவைக்க மெனக்கிடவில்லை. அதனால், மயூரா ஜெயக்குமார் மூன்றாமிடத்துக்குப் போனார். ஒருவேளை, இங்கு திமுக போட்டியிட்டிருந்தால் வானதி சீனிவாசன் வந்தே இருக்கமாட்டார்.
காங்கிரஸின் பிசுபிசுத்துப் போன பிரச்சார அணுகுமுறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே நடந்த உள்ளடி வேலைகள், மயூராவை பிடிக்காத திமுக-வினர் திசைமாறி கமல்ஹாசனுக்கு வாக்களித்தது போன்ற காரணங்களால் மயூரா மூன்றாமிடத்துக்கு போனார். இந்த நிலையில், இம்முறையும் தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தால் மீண்டும் மயூரா தான் வேட்பாளராக வருவார். அப்படி நடந்தால் பழைய வரலாறே திரும்பக் கூடும். அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதால் தான் தொகுதியை திமுக-வுக்கு ஒதுக்கச் சொல்லி தலைமையை இப்போதே வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறோம்” என்றார்கள்.
இதுகுறித்து மயூரா எஸ்.ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, “காங்கிரஸுக்கான தொகுதிகள் எண்ணிக்கை முடிவான பிறகு தான் எந்தெந்த தொகுதிகள் என முடிவாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவர். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக கமிட்டி போடப்படும். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நாங்கள் கேட்போம். அதை ஒதுக்குவது குறித்து திமுக முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. எனவே, இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று இப்போதே நாங்கள் கூற முடியாது. கோவை தெற்கு உள்ளிட்ட கோவையில் எந்தத் தொகுதியையும் திமுக-வினர் எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை. அதை நான் குறை சொல்ல முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT