Published : 17 Jun 2025 04:58 AM
Last Updated : 17 Jun 2025 04:58 AM
சென்னை: தமிழக அரசின் ஐசிடி அகாடமி மூலம் 34,635 மாணவர்கள், 7,500 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் - கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு 252 பயிற்சி திட்டங்கள் மூலம் தொழில்நுட்பம், மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்த 34,635 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக தமிழகம் முழுவதும் 153 கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 23,827 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையே, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப திறன்கள், தலைமை பண்புகள், சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன்கள் ஆகியவற்றை இளைஞர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையிலான முன்னெடுப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஐசிடி அகாடமி மேற்கொண்டு வருகிறது.
மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘லேர்னத்தான் 2024’, யுஐபாத் நிறுவனத்துடன் ‘ஸ்கில்-ஏ-தான் 2024’, ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் ‘இந்தியா டிசைன் வீக் போட்டி’, இளைஞர் தலைமை உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ‘இளைஞர் பேச்சு 2024’, கேஒய்என்.ஹுட் நிறுவனத்துடன் ‘கினொவேட் 2025’, ஒபென்வீவெர் நிறுவனத்துடன் இணைந்து தேசிய அளவிலான ‘கம்ப்யூட்டர் கோடிங்’ போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT