Published : 14 Jun 2025 01:46 PM
Last Updated : 14 Jun 2025 01:46 PM

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக தொல்லை: நயினார் நாகேந்திரன்

திருவாரூரில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நோகேந்திரன் பேசினார்.

திருவாரூர்: “திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர்.” என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்காக திருவாரூர் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜ மாவட்டத் தலைவர் விகே.செல்வம் தலைமையில் விளமல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து துர்காலயா சாலை, வடக்கு வீதி, கீழவீதி,தெற்கு வீதி வழியாக இரு சக்கர வாகன அணி வகுப்பு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், பாஜக மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் எவ்வளவு தடங்கல்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடங்கல்களை ஏற்படுத்துகிறார்கள். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை வைத்துதான் திமுக அரசியல் செய்துவருகிறது.

அந்த காலத்தில் அதெல்லாம் எடுபட்டது. தற்பொழுது அது எடுபடவில்லை. கீழடியை பொறுத்தமட்டில், ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகிறது. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல் காட்டிக்கொண்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். வரும் தேர்தலில் அது எடுபடாது. விஜய் அரசியலுக்கு வந்ததால் யாருக்கு லாப, நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்புதான் தெரியும்.

அதே நேரத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க நினைக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும். மேலும், எங்களுடைய கூட்டணியில் தேமுதிக கண்டிப்பாக வரவேண்டும் அப்போதுதான், திமுகவை தோற்கடிக்க முடியுமென நான் கூறியுள்ளேன். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமித்த கருத்தோடு வரவேண்டும்.” என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணி கட்சி ஆட்சி அமையுமா? தனிக்கட்சி ஆட்சி அமையுமா? என்ற கேள்விக்கு, “எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். அதேநேரத்தில், அதிமுக பழனிசாமிதான் முதல்வர்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x