Last Updated : 14 Jun, 2025 10:26 AM

1  

Published : 14 Jun 2025 10:26 AM
Last Updated : 14 Jun 2025 10:26 AM

நீர்நிலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்பது அரசின் செயலற்ற தன்மை: ஜி.கே.வாசன்

சென்னை: “திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மழைநீரை தேக்கப், பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் என எக்காலத்தில் மழை பெய்தாலும் மழைநீரை சேமிக்க, பாதுகாக்க தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் காலங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகளையும் முறையாக தூர் வாரி பாதுகாப்பாக வைத்திருந்தால் மழை நீரை சேமிக்க முடியும்.

தற்போது வெயில் காலம் என்பதால் மழை வருவதற்கு முன்பாக நீர்நிலைகளை முறையாக கண்காணித்து, தூர்வாரி, பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் இதனை சரியாக செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு என விவசாயிகள் குறை கூறுகின்றனர். காரணம் தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலம் மட்டுமல்லாமல் கோடையில் கிடைக்கும் மழை நீரையும் சேமிக்க, பாதுகாக்க உரிய நடவடிக்கையை எடுக்காமல் பல இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும் இந்த ஆண்டின் கோடையில் நிதி நெருக்கடி என்று கூறி குளங்களை சீரமைக்காமல் இருப்பது முறையல்ல. தற்போது பருவ மழையும் தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுமார் 25 ஆயிரம் சிறிய ஏரிகள், குளங்கள் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் பெரும்பாலான நீர்நிலைகளில் சீமை கருவை செடிகளும், ஆகாயதாமரை செடிகளும் புதராக மண்டி கிடக்கின்றன.

இந்த கோடையில் நீர்நிலைகளை தூர்வார நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறு துறைகளுக்கு கடன் வாங்கி செலவு செய்யும் அரசு அடிப்படைத்தேவையான, அத்தியாவசியத் தேவையான, அவசியத் தேவையான நீருக்காக நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மக்களை ஏமாற்றும் செயல். தென்மேற்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மழைநீரை சேமிக்க, பாதுகாக்க நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு மாநிலத்தில் விவசாயத்துக்காக, குடிநீருக்காக நீர்நிலைகளை முறையாக பராமரிக்க, குடிமராமத்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x