Published : 14 Jun 2025 08:09 AM
Last Updated : 14 Jun 2025 08:09 AM

இல்ல... ஆனா இருக்காரு..! - பதவி இழந்தாலும் பவர் காட்டும் பொன்முடி!

பேசக்கூடாததைப் பேசி திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தைப் பறிகொடுத்த பொன்முடி, நீதிமன்ற நெருக்கடியால் மந்திரி என்ற மகுடத்தையும் இழந்தார். ஆனாலும், தன்னை மீறி தனது எல்லைக்குள் யாரும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் பொன்முடி, இப்போது இலாகா இல்லாத அமைச்சர் போலவே வலம் வருவதாக ஆளும் கட்சியினரே அறிக்கை வாசிக்கிறார்கள்.

த​விர்க்க முடி​யாத நிர்​பந்​தத்​தின் காரண​மாக பொன்​முடியை அமைச்​சர் பதவியி​லிருந்து நீக்​கி​னாலும் விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு புதிய அமைச்​சர், பொறுப்பு அமைச்​சர் என யாரை​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நியமிக்​க​வில்​லை. இந்த நிலை​யில், அண்​மை​யில் தேர்​தல் பணி​களை கவனிக்க மண்ட பொறுப்​பாளர்​களை அறி​வித்த போது அமைச்​சர் எ.வ.வேலு விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு மண்​டலப் பொறுப்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார். இதையடுத்​து, பொன்​முடிக்கு போட்​டி​யாக இன்​னொரு அமைச்​சர் மாவட்​டத்​துக்​குள் அதி​காரம் செய்ய வரு​வதைக் கொண்​டாடித் தீர்த்த பொன்​முடி எதிர்ப்​பாளர்​கள், வேலுவை வரவேற்று சுவர் விளம்​பரங்​களை தீட்​டி​னார்​கள். அதி​லும் சிலர் அரசி​யல் செய்​தார்​கள்.

இதையெல்​லாம் ஜீரணித்​துக் கொள்​ள​முடி​யாத பொன்​முடி, ‘இதற்கு மேலும் என்னை அசிங்​கப்​படுத்த முடி​யு​மா?’ என திமுக சீனியர்​களிடம் வெடித்​த​தாகச் சொல்​கி​றார்​கள். இதையடுத்து விழுப்​புரம் மாவட்​டத்தை உள்​ளடக்​கிய மண்​டலத்​துக்கு அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்தை பொறுப்​பாள​ராக மாற்றி அறி​வித்​தது திமுக தலை​மை. வன்​னியருக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே எம்​ஆர்​கே-வுக்கு மண்​டலப் பொறுப்​பாளர் பதவி வழங்​கப்​பட்​டது என்று வெளி​யில் சொல்​லப்​பட்​டாலும் உள்​ளுக்​குள் நடந்த அரசி​யல் வேறு என்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், அமைச்​சர் பொறுப்​பிலிருந்து விடுவிக்​கப்​பட்​டாலும் காரில் இருந்த தேசி​யக் கொடி​தான் எடுக்​கப்​பட்​டதே தவிர மற்​றபடி நிழல் அமைச்​ச​ராகவே தான் பொன்​முடி வலம் வரு​கி​றார். மாவட்​டத்​தில் அவருக்​கான முக்​கி​யத்​து​வம் துளி​யும் குறைக்​கப்​பட​வில்​லை. அமைச்​சருக்​கான பிஎஸ்ஓ, மற்​றும் வீட்​டுக்​கான போலீஸ் பாது​காப்பு எது​வுமே திரும்​பப் பெறப்​பட​வில்​லை.

மாவட்​டத்​தில் நடக்​கும் அரசு நிகழ்ச்​சிகளில் பொன்​முடிக்​குத்​தான் அதி​காரி​கள் முக்​கி​யத்​து​வம் அளிக்​கி​றார்​கள். அதனால் அரசு விழாக்​களில் பொன்​முடி​யின் அதி​காரம் தூள் பறக்​கிறது. பள்ளி மாண​வர்​களுக்கு புத்​தகம் மற்​றும் சீருடை வழங்​கும் நிகழ்ச்​சிகள் அண்​மை​யில் நடை​பெற்​றது. இதில், விழுப்​புரத்​தில் லட்​சுமணன் எம்​எல்ஏ கலந்து கொண்ட நிகழ்ச்​சியை தவிர்த்​து​விட்​டு, பொன்​முடி​யின் திருக்​கோ​விலூர் தொகு​திக்​குட்​பட்ட அரகண்​டநல்​லூரில் பொன்​முடி பங்​கேற்ற நிகழ்ச்​சி​யில் தான் ஆட்​சி​யர் ஷேக் அப்​துல் ரஹ்​மான் பங்​கேற்​றார்.

இது குறித்து நம்​மிடம் பேசிய விழுப்​புரம் மாவட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர், “தி​முக-வுக்கு கடந்த 35 ஆண்​டு​களாக பக்​கபல​மாக இருந்​தவர் பொன்​முடி. மு.க.அழ​கிரி, கனி​மொழி போன்​றவர்​களால் கட்​சிக்​குள் பிரச்​சினை​கள் வெடித்த போதெல்​லாம் ஸ்டா​லினுக்கு ஆதர​வாக நின்​றார். அதனாலேயே கட்​சிக்​குள் அவரது செல்​வாக்கு கிடு​கிடு​வென உயர்ந்​தது. ஆனால், அந்த செல்​வாக்கை தக்​க​வைத்​துக் கொள்​ளத் தவறி​விட்​டார். சர்ச்​சைப் பேச்​சால் பொன்​முடியை துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து நீக்​கிய போது அதுகுறித்து சமா​தானத்​துக்​காகக் கூட அவரிடம் ஒரு வார்த்தை பேச​வில்​லை. இதனால் விரக்தி அடைந்​தவர், அடுத்​த​தாக அமைச்​சர் பதவியை​யும் இழக்க வேண்​டிய கட்​டா​யத்​துக்கு ஆளான போது ரொம்​பவே உடைந்து போனார்.

இருந்த போதும், தனக்​குப் பதிலாக விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த யாருக்​கும் அமைச்​சர் பதவி தரக் கூடாது, பொறுப்பு அமைச்​சரை​யும் நியமிக்​கக் கூடாது, மாவட்ட நிர்​வாகத்​தில் எனக்​கான முக்​கி​யத்​து​வம் எவ்​விதத்​தி​லும் குறையக் கூடாது என்ற உத்​தர​வாதத்தை எல்​லாம் வாங்​கிக் கொண்டு தான் அமைச்​சர் பதவியை விட்டு வில​கி​னார். சீனியர் என்​ப​தால் தலை​மை​யும் அவரது இந்த நிபந்​தனை​களை எல்​லாம் ஏற்​றுக் கொண்​டது. அதனால் தான் இது​வரை பொறுப்பு அமைச்​சர் கூட நியமிக்​கப்பட வில்​லை” என்​ற​னர்.

மாவட்ட நிர்​வாகம் முக்​கி​யத்​து​வம் கொடுத்​தா​லும் தேவையற்ற பிரச்​சினை​களை தவிர்ப்​ப​தற்​காக சற்றே அடக்கி வாசிக்​கும் பொன்​முடி, தனது மகன் கவுதம சிகாமணி மாவட்ட பொறுப்​பாள​ராக இருக்​கும் திருக்​கோ​விலூர், விக்​கிர​வாண்டி தொகு​தி​களில் நடை​பெறும் அரசு மற்​றும் கட்சி நிகழ்ச்​சிகளில் தவறாமல் பங்​கேற்று வரு​கி​றார். அதேசம​யம் தனது அரசி​யல் எதிரி​களான முன்​னாள் அமைச்​சர் செஞ்சி மஸ்​தான் மாவட்ட பொறுப்​பாள​ராக இருக்​கும் திண்​டிவனம், செஞ்​சி, மயிலம் தொகு​தி​களி​லும் லட்​சுமணன் எம்​எல்ஏ மாவட்​டப் பொறுப்​பாள​ராக இருக்​கும் விழுப்​புரம், வானூர் தொகு​தி​களி​ல் நடக்​கும் நிகழ்ச்​சிகளிலும் மறந்​தும்​கூட மூக்கை நுழைப்​ப​தில்​லை.

திமுக ஆட்​சிக்கு வரும்​போதெல்​லாம் தேசி​யக் கொடி கட்​டிய காரிலேயே பயணித்து பழக்​கப்​பட்​டு​விட்ட பொன்​முடி, இப்​போது திமுக கொடி கட்​டிய காரில் பயணம் செய்​கி​றார். அவருக்​குள் இருக்​கும் அந்த ஏக்​கத்​தைப் போக்க, அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் தேசி​யக் கொடி கொட்​டிய தனது காரின் முன் இருக்​கை​யில் தனது நண்​பர் பொன்​முடிக்கு இடமளித்து அழைத்​துச் செல்​வதை​யும் வித்​தி​யாச​மாகப் பார்த்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள் விழுப்​புரம் திமுக-வினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x