Published : 13 Jun 2025 05:37 AM
Last Updated : 13 Jun 2025 05:37 AM
சேலம்: டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலத்தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்பில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பிருந்தாதேவி வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து 4-வது ஆண்டாக உரிய காலத்தில் நீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இனி சாதாரண ரகம் ரூ.2,500-க்கும், சன்ன ரகம் ரூ.2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர்.
மதுரை வந்த அமித்ஷா, தமிழக அரசை குறைசொல்லி விட்டுப் போயிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களை மடைமாற்றம் செய்து, மக்களுக்கான நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்வதாக கூறியிருக்கிறார். உண்மையில், குடிநீர், வீடு கட்டுதல் என அனைத்து திட்டங்களையும், மத்திய அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. பிரதமர் பெயர் வைத்துள்ள திட்டங்களுக்கே மாநில அரசு 50 சதவீதத்துக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதை எப்படி அவர் குறை சொல்ல முடியும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை, நிதியும் கொடுக்கவில்லை. மிகச் சில திட்டங்களுக்கு ஒதுக்கும் பணமும் முழுமையாக வந்து சேருவதில்லை. 10 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை. ஆனால், கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
தமிழகத்தின் தொன்மையை மறைக்கவும், பண்பாட்டை அழிக்கவும்தான் மத்திய அரசு முயற்சிக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க எதிர்க்கட்சித் தலைவருக்கு துணிவு கிடையாது. தமிழக மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். டெல்லியில் இருந்து வருபவர்களை ஒருபோதும் தமிழகத்தை ஆள விடமாட்டோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT