Last Updated : 12 Jun, 2025 07:56 PM

8  

Published : 12 Jun 2025 07:56 PM
Last Updated : 12 Jun 2025 07:56 PM

“பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி தரப்பு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன்” - அண்ணாமலை

கோவையில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன வாக்குறுதிகள் அளித்தோம். அவற்றை எவ்வாறு நிறைவேற்றி உள்ளோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவே இந்நிகழ்வு. 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை படித்து பாருங்கள் என நாங்கள் கூறுகிறோம்.

ஆனால் திமுக-வில் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். 2014-ல் அளித்த வாக்குறுதி, முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறோம். அதில் பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை இந்திய மக்களுக்கு கொடுப்போம் என கூறினோம். கருப்பு பணத்தை மீட்பதற்காக எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தோம். கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளன. தவறு செய்து தலைமறைவானர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன. ‘முத்ரா’கடன் திட்டம் மூலம் குறு, சிறு தொழில்துறையினர் பயனடைந்துள்ளனர். கோவைக்கு விரைவில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி ஆகிய இரண்டு விதத்தில் மத்திய அரசுக்கு நிதி அனுபப்படுகிறது.

நாம் மத்திய அரசுக்கு கொடுத்ததை விட அவர்கள் நமக்கு ஒரு மடங்கு கூடுதலாக நிதி வழங்கியுள்ளனர். திமுக அரசு கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. முதல்வர் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு சதவீதத்தை குறிப்பிடுகிறார். பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. திமுக ஒரு முறை கூட குறைக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த மாநில அரசுகளும் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி கல்வித்துறை சார்ந்த மத்திய அரசின் திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டு தற்போது முடியாது என்று கூற கூடாது. ஜவுளித் தொழில் துறையில் செயற்கை இழை (பாலியஸ்ட்ர், விஸ்கோஸ்) தொழில் செய்பவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து மத்திய அமைச்சருடன் தொழில்துறையினரை சந்திக்க உதவினோம். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை பொருத்தவரை நிலங்கள் முழுவதும் விமான நிலைய ஆணையகத்துக்கு வழங்கவில்லை. மீதமுள்ள நிலத்தை வழங்கினால் மட்டுமே வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதற்கு திமுக அரசு தான் காரணம். கோவையில் என்ஐஏ அலுவலகம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளோம். பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. விஸ்வகர்மா, மலிவு விலை மருந்தகம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் சிறப்பான முறையில் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பில் போட்டிக்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு அவை செயல்படுத்த முடியாமல் உள்ளன.

நூறு நாள் வேலை திட்டத்தில் கூட தமிழக அரசு ஏமாற்று வேலை செய்கிறது. பிரதமர் விவசாயிகளுக்கான திட்டத்தில் (பிஎம் கிசான்) தமிழ்நாட்டில் 38 லட்சமாக இருந்த விவசாயிகள் எண்ணிக்கை, தற்போது 21 லட்சமாக குறைத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது.

நான் பாஜகவின் தொண்டன். கட்சியை வளர்ப்பதற்காக மட்டும்தான் இருக்கிறேன் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டுமோ அங்கே வாயை மூடிக்கொள்வேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு நிச்சயம் பேசுவேன். கீழடி ஆராய்ச்சியை பொறுத்தவரை மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு வழங்கவில்லை. மாறாக அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். எனக்கு ஆதரவாளர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் என் நண்பர்கள் தான்.

கனிமொழி, சசிதரூர் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி-க்கள் குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து சிறந்த முறையில் எடுத்துரைத்துள்ளனர். பாமக பொறுத்தவரை ராமதாஸ், அன்புமணி இருவருமே முக்கியமானவர்கள். இருவரும் ஒரே நேர்கோட்டுக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை திட்டங்களுக்கு மாநில அரசின் அலட்சியத்தால் உ.பி. போன்ற மற்ற மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மதுரை முருகன் மாநாட்டை பொறுத்தவரை, திமுக எங்களுக்காக அதிக விளம்பரம் செய்துவிட்டது. இலவசமாக விளம்பரம் செய்து கொடுத்த திராவிட கழகம் மற்றும் காங்கிரசுக்கு நன்றி.

அண்ணா பல்கலை விவகாரத்தில் பல மர்மங்கள் உள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றவாளி என நான் கூறவில்லை. ஆனால் அவரும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு காவல் அதிகாரிகளும் போன் காலில் பேசியுள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு மேல்முறையீடு செய்ய அவரது வழக்கறிஞரிடம் அறிவுறுத்தியுள்ளேன். தேவையான ஆதாரங்களை நான் அவர்களுக்கு வழங்கி உதவுவேன்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x