Published : 12 Jun 2025 04:34 PM
Last Updated : 12 Jun 2025 04:34 PM
திருவள்ளூர்: “முதல்வர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு கால சாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் பங்கேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியது: “பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
2007-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் இன்று 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி, கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. இப்படி எவ்வளவு நல்லது செய்தாலும், அதை பாராட்டும் மனமில்லாமல் குற்றம்சாட்டும் மன நிலையிலேயே தமிழக முதல்வர் உள்ளார். ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. அதே நேரத்தில் பாஜக அரசின் சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர். எல்லா மாநில உறுப்பினர்கள் வரும் நாடாளுமன்றத்தில் தமிழின் அடையாளமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எப்போதெல்லாம் மகுடம் சூட்ட வேண்டுமோ அப்பொதெல்லாம் பிரதமர் மோடி மகுடம் சூட்டி வருகிறார்.
கீழடி என்ற ஒன்றை வைத்துக் கொண்டு தமிழின் தொன்மையை மறைப்பதற்கு பாஜக அரசு முயற்சி செய்வதை போல பொய்யான குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கீழடியில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கீழடியில் உள்ள தொன்மையான பகுதியை உலக அரங்குக்கு கொண்டு செல்ல மத்திய பாஜக அரசுதான் காரணம்.
தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருக்கிறார்கள். மருத்துவர்களை விடுப்பு எடுக்காமல் பணி செய்ய கூறுகிறார்கள் போன்ற பிரச்சினைகளை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பார்த்தால் நல்லது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற அரசு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT