Published : 12 Jun 2025 01:16 PM
Last Updated : 12 Jun 2025 01:16 PM
சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பாஜக பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் கட்டமைக்க முயல்கிற திணிப்பிற்கு மாறாக கீழடி அகழாய்வின் முடிவுகள் வெளிவந்து கொண்டே இருப்பதுதான்.
கீழடி அகழாய்வில் மண் அள்ளிப்போடும் நோக்கத்துடன் அகழாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமிற்கு மாற்றப்பட்டார். பிறகு வந்த ஸ்ரீராம் என்ற அதிகாரி கீழடியில் மேற்கொண்டு ஆய்வு செய்ய எதுவும் இல்லை என்றார். ஒன்றிய அகழாய்வுத்துறை நிதி ஒதுக்க மறுத்து ஆய்விலிருந்து விலகிக் கொண்டது.
இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை நடத்தும் ஆய்வு தமிழர்கள் வாழ்வியல் குறித்தும், தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் விவரிக்கும் சங்க இலக்கிய பாடல்களின் பொருண்மை சான்றுகளை வெளிக்கொணர்ந்த வண்ணம் உள்ளன. இதை சரஸ்வதி நாகரிகம் என்று சரடு விடுபவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஒன்றிய அரசு மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
இது வரலாற்றுக்கும், அறிவியலுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. வரலாறு மற்றும் அறிவியலுக்கு புறம்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தின் காரணமாகவும் ஒன்றிய பாஜக அரசு இந்த நிலைபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அடாவடித்தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கற்பனை அடிப்படையிலோ, நம்பிக்கை அடிப்படையிலோ கீழடி அகழாய்வு அறிக்கையை எழுதவில்லை, உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொல்லியல் அறிவியல் அடிப்படையிலும், தரவுகளின் அடிப்படையிலும் எழுதியுள்ளதாக அமர்நாத் ராமகிருஷ்ணா தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, அழகன்குளம், கொடுமணல் என தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வு வெளிப்படுத்தும் உண்மை வரலாறு, இந்தியாவின் பன்மை வரலாறு ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் கட்டுக் கதைகளை அறுத்து எரிகிறது. அதிகாரத்தின் வாள்முனையால் வரலாற்றை திருத்தமுடியாது என்பதே வரலாறு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உள்ளது உள்ளபடி தாமதமில்லாமல் வெளியிடுமாறு ஒன்றிய அகழாய்வுத்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT