Published : 12 Jun 2025 08:41 AM
Last Updated : 12 Jun 2025 08:41 AM
2021 தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்களில் முக்கிய மானவர் கே.சி.வீரமணி. ஜோலார்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, இரண்டு முறையும் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். அந்த செல்வாக்கில் கடந்த முறையும் இங்கு போட்டியிட்டார். ஆனால், மு.க.ஸ்டாலினே இங்கு வந்து போட்டியிட்டாலும் வீரமணியை வீழ்த்துவது கடினம் என்று சொல்லப்பட்ட நிலையில், வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியிடம் தோற்றுப் போனார் வீரமணி.
தொகுதி முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் என செல்வாக்கான மனிதராக வலம் வந்த கே.சி.வீரமணியின் அரசியல் செல்வாக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொஞ்சம் சரிய ஆரம்பித்தது. இருந்த போதும் நம்பிக்கையோடு கடந்த தேர்தலில் வாக்குக் கேட்டார். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரான இவரை எதிர்த்து தொகுதிக்கு புதியவரான வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியை களமிறக்கியது திமுக.
அமைச்சரை தோற்கடித்தால் அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கையில் கிராமங்களில் கூட வீதி வீதியாகச் சென்று வாக்குக் கேட்டார் தேவராஜி. இரண்டு முறை ஜெயித்தவர் என்பதால் வீரமணி மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும் தேவராஜிக்கு சாதகமாக இருந்தது. ஆனாலும், இவரை சாதாரணமாக எடைபோட்ட வீரமணி, “இந்தத் தொகுதிக்கு நான் எண்ணிலடங்கா திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.
அதனால் என்னை வெல்ல இன்னொருத்தன் பிறந்து தான் வரணும்” என்று அதீத நம்பிக்கையில் கூடுதல் தெம்பாகவே இருந்தார். கடைசியில், சொற்ப வாக்குகளில் வீரமணி தோற்றுப் போன போது அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருப்பத்தூர் மாவட்ட அதிமுக-வே திகைத்துப் போய் நின்றது.
இதையடுத்து “இத்தனை செய்தும் இந்த மக்கள் நம்மை அங்கீகரிக்கவில்லையே... இவர்களை புரிஞ்சுக்கவே முடியலையேப்பா” என புலம்பித் தவித்த வீரமணி, தனது தீவிர அரசியல் நடவடிக்கைகளைக்கூட சற்றே குறைத்துக் கொண்டார். இந்த நிலையில், இப்போது தேர்தல் வருகிறது என்றதும் மீண்டும் தனது பிரியத்துக்குரிய ஜோலார்பேட்டை தொகுதியை வலம் வர ஆரம்பித்திருக்கிறார். அதிமுக மட்டுமல்லாது பிற கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கெடுக்கும் வீரமணி, தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விஷேசங்களிலும் தட்டாமல் ஆஜராகி பழைய உறவை புதுப்பித்து வருகிறார்.
வீரமணி மீண்டும் களத்துக்கு வந்திருப்பது சிட்டிங் எம்எல்ஏ-வான தேவராஜிக்கு உள்ளுக்குள் சற்றே கிலியை உண்டாக்கி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். மாவட்டச் செயலாளராக இருந்தும் கடந்த முறையே தட்டுத் தடுமாறி தொகுதியை வென்ற தேவராஜி இம்முறையும் வீரமணியை எதிர்த்து ஜோலார்பேட்டையில் நின்றால் கரை ஏறுவது கஷ்டம் தான் என திமுக-வினரே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதை உள்வாங்கி இருக்கும் தேவராஜி, இம்முறை ஜோலார்பேட்டையை விட்டுவிட்டு தனது சொந்தத் தொகுதியான வாணியம்பாடியில் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். தனது இந்த விருப்பத்தை தலைமையிடம் அரசல் புரசலாக அவர் சொன்னதாகவும், “வீரமணியை எதிர்த்து நீங்கள் நிற்காவிட்டால் வேறு யார் நிற்பது? அதிமுக மாவட்டச் செயலாளரை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர் தான் போட்டியிட வேண்டும்.
அதற்கான வேலைகளைப் போய்ப் பாருங்கள்” என தலைமையில் சொன்னதாகவும் ஜோலார்பேட்டை தொகுதிக்குள் ஒரு செய்தி வட்டமடிக்கிறது. அதேசமயம், கே.சி.வீரமணியை எதிர்த்து நிற்க தேவராஜி தயக்கம் காட்டினால் நாங்கள் வீரமணியை எதிர்த்து நிற்கத் தயார் என திமுக ஒன்றிய செயலாளர்கள் சிலர் திமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் சொல்லி இருப்பதும் தேவராஜி வட்டாரத்தை கலக்கமடைய வைத்திருக்கிறது.
இதனிடையே, விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் கே.சி.வீரமணி, இம்முறை எந்த ‘லெவலுக்கும்’ இறங்கி அடிக்க தயாராய் இருக்கிறார் என்று திமுக-வினரின் வயிற்றில் அதிமுக-வினரும் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என க.தேவராஜியின் மகனும் மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான பிரபாகரனிடம் கேட்டதற்கு, “கடந்த முறையே வாணியம்பாடி அல்லது ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடத்தான் அப்பா விருப்பம் தெரிவித்தார்.
கட்சி தலைமை ஜோலார்பேட்டை தொகுதியை ஒதுக்கியது. அதில் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் நல்லமுறையில் செய்து வருகிறோம். அதேபோல் இந்த முறையும் அதே இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோம். தலைமை எங்களுக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குகிறதோ அதில் நிச்சயம் வெற்றிபெறுவோம். மற்றபடி, யாருக்காகவும் பயந்து கொண்டு தொகுதி மாற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இம்முறையும் ஜோலார்பேட்டையையே ஒதுக்கினாலும் அதிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT