Published : 11 Jun 2025 06:26 PM
Last Updated : 11 Jun 2025 06:26 PM
நாகர்கோவில்: குமரியில் கடலையும், கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களை கைவிடக் கோரி சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, இந்தத் திட்டங்களை கைவிடக் கோரி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் இன்று குடும்பத்துடன் கடலில் இறங்கி கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது “பாதுகாத்திடு! பாதுகாத்திடு! கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு!” “அழிக்காதே! அழிக்காதே! கடலையும் கடற்கரையையும் அழிக்காதே!”, “இழப்பீடு வழங்கு! கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்கு!” என கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில், குமரி தெற்கு கடல் பகுதியில் 27155 சதுர கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் காற்றாலை திட்டத்தை கைவிட வேண்டும்.
கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரையிலான அணுக் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிள்ளியூர் தாலுகாவில் 1144 ஹெக்டேர் நிலங்களில் உள்ள அணுக் கனிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர்களின் பாதுகாப்புக்காக, எதிர்பாராத கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்துக்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமையேற்றனர். துணைத் தலைவர் கமலஸ், செயலர் ஆரோக்கியம், மற்றும் ஊர் உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT