Last Updated : 11 Jun, 2025 12:20 PM

1  

Published : 11 Jun 2025 12:20 PM
Last Updated : 11 Jun 2025 12:20 PM

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ கண்டனம்

வைகோ | கோப்புப் படம்

சென்னை: “கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது,” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம்” என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016-இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு - அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது.

தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை மேலும் நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றும்படி கோரியது.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடியில் பண்டைய நாகரிகத்தின் தடயங்களை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவர் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமக்கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் நடவடிக்கை கீழடி அகழாய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்து வேதகால நாகரிகத்தை தூக்கிப் பிடிக்கும் கூட்டத்தின் உள்நோக்கத்தை புலப்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார்.

கீழடி தமிழ் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரீகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; ஆரியர்கள் தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராணங்கள் தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசு, தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று இந்தி ஆதிக்கத்தையும், சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x