Published : 08 Jun 2025 06:48 AM
Last Updated : 08 Jun 2025 06:48 AM
பொதுமக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அச்சுந்தன் வயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஆனால், திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெறும்.
அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததும், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை (இன்று) காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், மாலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே நடைபெறும் பிரச்சினையில் கருத்துகூற முடியாது. பெங்களூருவில் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் 12 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இதைவிட அதிக கூட்டம் கூடியது. ஆனால், எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. பெங்களூருவில் கர்நாடக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இந்த சம்பவத்தைப் பற்றிப் பேசாமல் அமைச்சர் மனோ தங்கராஜ் கோயிலுக்கு கூட்டமாக செல்லக் கூடாது என்று சம்பந்தமில்லாமல் கூறியுள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார். பேட்டியின்போது, மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT