Published : 06 Jun 2025 05:25 AM
Last Updated : 06 Jun 2025 05:25 AM

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது: அன்புமணி

சென்னை: மத்திய அரசின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு, குழப்பத்தை ஏற்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு: 2025-ம் ஆண்டிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான், அதைத்தொடர்ந்து 2035-ம் ஆண்டில் அடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைக்கப்படாது.

நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு உயர்த்தப்படுகிறதோ, அதே அளவில் தமிழகத்திலும் உயர்த்தப்பட வேண்டும் அல்லது தற்போது உள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதற்கேற்ப 2025-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தொகுதிகள் மறுசீரமைப்பை 2035 வரை ஒத்திவைக்க முடியும்.

அதேபோல் 2027-ல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டால் 2030-க்குள் அதன் விவரங்கள் வெளியாக வாய்ப்பில்லை. மத்திய அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டதால், தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு, கணக்கெடுப்பு பணிகளை தொடங்க முன்வரவேண்டும்.

ஓபிஎஸ் வரவேற்பு: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x