Published : 04 Jun 2025 07:26 PM
Last Updated : 04 Jun 2025 07:26 PM
மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்குப் போட்டியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ல் நடத்துகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1-ல் நடைபெற்றது. 20 ஏக்கர் பரப்பில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானது ஆகும். மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், உச்ச நீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக, பாஜகவை நேரடியாகவும், நடிகர் விஜய்யை மறைமுகமாகவும் விமர்சனம் செய்தார். முதல்வர் பேசும்போது, “மொத்த தமிழகத்தையும் பாஜக கன்ட்ரோலுக்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். இதற்காகத்தான் அமித் ஷா அடிக்கடி தமிழகம் வருகிறார். மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன்... எந்த ‘ஷா’ வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரம், சாதிக் கலவரத்தை தூண்டுவார்கள். மக்களைப் பிளவுபடுத்துவார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, மாநிலத்தின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.
திமுக பொதுக்குழுவில் முதல்வரின் பேச்சு, குறிப்பாக அமித் ஷா குறித்து முதல்வர் பேசியது கடுமையான கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு திமுக பொதுக்குழு கூட்டம் நடத்திய மதுரையிலேயே பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி அமித் ஷாவை கொண்டே பதிலடி கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து, திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே சுற்றுச்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் மைதானத்தில் ஜூன் 8-ம் தேதி மாலை 3 மணியளவில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் தொடர்பாக பாஜக அலுவலகமான கமலாலயத்திலிருந்து பாஜக நிர்வாகிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாஜகவினர் கூறுகையில், ‘மத்திய அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு ஜூன் 8-ல் வருகிறார். மதுரையில் நடைபெறும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக பொதுக்குழுவை விட அமித்ஷா பங்கேற்கும் கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், பாஜக - அதிமுக வெற்றி வியூகம் குறித்தும், வேட்பாளர் தேர்வு, தொகுதி தேர்வு மற்றும் தேர்தலில் திமுக செல்வாக்கைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT