Published : 03 Jun 2025 05:44 AM
Last Updated : 03 Jun 2025 05:44 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் ராமாபுரத்தில் 33.33 மீ. நீளத்துக்கு யூ-கர்டர் நிறுவி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம், உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, மாதவரம் - சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (4-வது வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இத்தடத்தில் ஒரு பகுதியாக, ராமாபுரத்தில் 33.33 மீட்டர் நீளத்துக்கு யூ-கர்டர் நிறுவி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இது, இந்தியாவில் முதல் நீளமுள்ள யூ-கர்டர் ஆகும்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யூ-கர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகும். யூ-கர்டர் என்பது கான்கிரீட் அல்லது கம்பி போன்றவற்றுடன் கூடிய ஒரு கட்டுமானப் பொருளாகும். பொதுவாக பாலங்கள், உயர்மட்ட பாதைகள் போன்ற கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. உயரமான தூண்களை இணைக்க இது உதவுகிறது.
தற்போது இந்த கர்டரை நிறுவும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. காங்கிரீட் பாலத்தின் ஒரு பகுதியாகவும், ஒரு தூணை மற்றொரு தூணுடன் இணைக்கும் துண்டாகவும் உள்ள ஸ்பான்களில் யூ-கர்டர் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்பானிலும் இரு கர்டர்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீட்டர் நீளமுள்ள 6 யூ-கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் சி.முரளி மனோகரன் (உயர்மட்ட கட்டுமானம்), துணை பொதுமேலாளர் ஏ.ராமகிருஷ்ணன் (கட்டுமானம்), கே.பவானி உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT