Published : 03 Jun 2025 04:55 AM
Last Updated : 03 Jun 2025 04:55 AM
விழுப்புரம்: ‘பாமகவில் அனைத்து அதிகாரங்களும், கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது’ என முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாசை, பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் நேற்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவரும், பொதுச்செயலாளராக ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், பொருளாளராக சிறுபான்மையினரும் இருக்க வேண்டும் என்பது பாமக கட்சியின் சட்ட விதிகளாகும்.
அதன்படிதான், பொருளாளராக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மாநில பொருளாளராக சிறப்புடன் செயல்பட்டுள்ளார். கட்சிக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார். திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு, மன்சூரின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது. இதனால், பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம், சேர்க்கை என்பது கிடையாது. ராமதாசை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2026-ல் நடைபெறக் கூடிய தேர்தலில் பாமக வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான சூழ்நிலையும் கனிந்து வருகிறது. இப்பிரச்சினை எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என ராமதாஸும் கூறியுள்ளார்.
பாமகவின் அமைப்பு விதிகளை வகுத்த முக்கியமானவர்களில் நானும் ஒருவன். பாமக தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் உள்ளவர்கள், நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட வேண்டும் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அமல்படுத்தும்போது, பொதுச்செயலாளர் மூலம் செயல்படுத்தப்படும்.
‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்பதுபோல் பாமக சட்டவிதிகளின்படி, அனைத்து அதிகாரங்களும் ராமதாஸிடமே உள்ளது. ராமதாஸ் வழிகாட்டுதலின்படிதான் செயல்படுவோம், அவரது கொள்கைகளைப் பின்பற்றுவோம் என செயல் தலைவர் அன்புமணியும் கூறி வருகிறார். கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை மட்டுமே ராமதாஸ் நீக்கி வருகிறார்.
ராமதாஸ் கைகாட்டும் நபர்களை ஏற்றுக்கொண்டு, 2026-ல் நடைபெறக்கூடிய தேர்தலில் செயல்படுவோம். ராமதாஸ், அன்புமணி இருவரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான், கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். தனி அணி என அன்புமணி கூறுவது அவரது கருத்தாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT