Published : 02 Jun 2025 12:07 AM
Last Updated : 02 Jun 2025 12:07 AM
தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 2) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மணிமுத்தாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் 1 செமீ.. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT