Published : 01 Jun 2025 06:23 PM
Last Updated : 01 Jun 2025 06:23 PM
கோவை: “தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு போதும் நடக்காது.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 2026-ல் தேமுதிகவுக்கு சீட் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்.” என்று சூசகமாகப் பேசினார். இதனால், அதிமுக முடிவில் தேமுதிகவுக்கு அதிருப்தி, கூட்டணியில் விரிசல் போன்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பற்றி 27-வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதில் , துரோக அதிமுக என பயன்படுத்தியுள்ளனர். அது நாங்கள் இல்லை; திமுக தான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, அவர் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்த போதும் அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து செயல்படுத்தினோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி நடக்கிறது. தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி. திமுக மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தார்கள். அப்போது ஏன் கல்விக் கொள்கையில் இந்த திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தவில்லை?
அப்போதே கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் மக்களை பற்றியும், மாணவர்களை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் திமுகவின் வாடிக்கை.
முதல்வர் மதுரை வரும் போது சாக்கடை கழிவுநீர் செல்கின்ற கால்வாயை தூர்வாராமல் மிக மோசமாக இருந்தது. அது அவர்களுக்கே பிடிக்காமல் தான் திரை போட்டு மறைத்தனர். அப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் உள்ளது.
நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜூனாவின் விமர்சன கருத்துக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு போதும் நடக்காது.” என்று கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலுசாமி, எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT