Published : 01 Jun 2025 12:07 AM
Last Updated : 01 Jun 2025 12:07 AM

2016 அக்டோபருக்கு முன் விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறைப்படுத்த இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் விற்கப்பட்ட தனி மனைகளை எந்த காலக்கெடுவும் இன்றி இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், கடந்த 2016 அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்த பட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப் பத்திரம் கடந்த 2016 அக்.20 அல்லது அதற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவையும் வரன்முறைப்படுத்த அந்த விதிகள் வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வரையறையானது பல்வேறு அரசாணைகள் மூலம் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2025-26-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, ‘‘கடந்த 2016 அக்.20-ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், அந்த தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இன்றி மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும்’’ என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக, நகர ஊரமைப்பு இயக்குநர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் வரன்முறைக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் பதிவு செய்த விற்பனை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த மனையை எவ்வித காலக்கெடுவும் இன்றி இணையவழி மூலம் விண்ணப்பித்து ஏற்கெனவே உள்ள விதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி வரன்முறைப்படுத்த உத்தரவிடுமாறு கோரினார்.

அவரது கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தனி மனைகளை ஆவணங்கள் அடிப்படையில் இணையவழி விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x