Published : 30 May 2025 04:26 PM
Last Updated : 30 May 2025 04:26 PM
சென்னை: கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிகத் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
நேற்று (மே 29) காலை மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும்- கேபுபாராவுக்கும் (வங்கதேசம்) இடையே நேற்று மதியம் கரையை கடந்தது.
இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே 31-ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 1 முதல் ஜூன் 5-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (மே 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், இன்று (மே 30) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 31 முதல் ஜூன் 3ம் தேதி வரை, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில், இன்று (மே 30) வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய – தென்மேற்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மே 31 முதல் ஜூன் 3ம் தேதி வரை, வடக்கு-மத்திய- தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில், இன்று (மே 30) மற்றும் நாளை (மே 31) தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு - மத்திய அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை, வடகிழக்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT