Published : 29 May 2025 08:07 PM
Last Updated : 29 May 2025 08:07 PM
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்திக்கான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன.
தமிழகத்தில் கோடை காலங்களில் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க பெரும் உதவி புரிவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள புனல் நீர் மின் நிலையங்களே. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம், அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் மின் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு கோடை காலத்தில் மின் உற்பத்தி துரிதமாக நடந்தது.
மேலும், காட்டுக்குப்பை பகுதியில் புதிதாக நடைபெற்று வரும் குந்தா நீர் மின் நிலைய உற்பத்தி பணிகளுக்காக எமரால்டு அணை திறக்கப்பட்டதால், எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கி, மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய மலைத் தொடரான அவலாஞ்சி, எமரால்டு, போர்த்தி மந்து போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக அதிகபட்சமாக அவலாஞ்சியில் 10 செ.மீ., அதிமாக மழை பெய்த நிலையில் அப்பர் பவானி, அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய முக்கிய அணைகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, குந்தா உட்பட அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு: குந்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கட்லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் முழு கொள்ளளவான, 89 அடியை எட்டியது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கோடை காலத்தில் வறண்டு போன அணைகளில் தற்போது பெய்து வரும் மழையால் நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளின் இருப்பு அதிகரித்து வருவதால் மின்வாரியத்தினர் ஆறுதல் அடைந்துள்ளனர். மழை தொடரும் பட்சத்தில் அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேற்று காலை 9 மணி நிலவரப்படி நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு நிலவரம்: முக்குறுத்தி (அணை) - 18 (கொள்ளளவு) - 16 இருப்பு(அடியில்), பைக்காரா (அணை) - 100 (கொள்ளளவு) - 90 இருப்பு(அடியில்), சாண்டி நல்லா (அணை)- 49 (கொள்ளளவு)- 35 இருப்பு(அடியில்), கிளன் மார்கன் (அணை) – 33 (கொள்ளளவு) - 26 இருப்பு(அடியில்), மாயார் (அணை) – 17 (கொள்ளளவு) - 16 இருப்பு (அடியில்), அப்பர் பவானி (அணை) – 210 (கொள்ளளவு) -160 இருப்பு (அடியில்), பார்சன்ஸ்வேலி (அணை) - 77 (கொள்ளளவு) - 72 இருப்பு (அடியில்), போர்த்தி மந்து (அணை) - 130 (கொள்ளளவு) - 45 இருப்பு (அடியில்), அவலாஞ்சி (அணை)- 171 (கொள்ளளவு) - 31 இருப்பு (அடியில்), எமரால்டு (அணை)- 184 (கொள்ளளவு) - 44 இருப்பு (அடியில்), குந்தா (அணை) - 89 (கொள்ளளவு) - 89 இருப்பு (அடியில்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT