Last Updated : 26 May, 2025 07:50 PM

2  

Published : 26 May 2025 07:50 PM
Last Updated : 26 May 2025 07:50 PM

மின்சார ரயில் இன்ஜின்களுக்கான மேம்படுத்தல் போட்டி: முதல் பரிசை வென்ற தெற்கு ரயில்வே!

சென்னை: பனாரஸ் ரயில் இன்ஜின் பணிமனையில் நடைபெற்ற மின்சார ரயில் இன்ஜின்களுக்கான கேப் மேம்படுத்தல் போட்டியில் தெற்கு ரயில்வேயின் ராயபுரம் ரயில் இன்ஜின் பணிமனை முதல் பரிசை வென்றுள்ளது.

பனாரஸ் இன்ஜின் பணிமனையில் 42 வது மின்சார லோகோ பராமரிப்பு ஆய்வுக் குழு கூட்டம் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இந்திய ரயில்வேயில் மின்சார இன்ஜின்களுக்கான அழகுப் போட்டி என்று அழைக்கப்படும் கேப் மேம்படுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், 16 ரயில்வே மண்டலங்களும், 3 ரயில்வே உற்பத்தி ஆலைகளும் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் கேப் மேம்படுத்தல் போட்டியில் முதல் பரிசை தெற்கு ரயில்வேயின் ராயபுரம் மின்சார இன்ஜின் பணிமனை வென்றது. அதாவது, தென் மத்திய ரயில்வேயில் உள்ள லல்லகுடாவில் உள்ள மின்சார இன்ஜின் பணிமனையுடன் இணைந்து, ராயபுரம் மின்சார இன்ஜின் பணிமனை வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டன.

இந்த விருதை ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (இழுவைப் பிரிவு) வி.பி. சிங், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (ரோலிங் ஸ்டாக்) வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தெற்கு ரயில்வேயின் தலைமை மின் லோகோ பொறியாளர் என்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் ராயபுரம் மின்சார ரயில் பணிமனையின் மூத்த கோட்ட மின் பொறியாளர் நாக சீனிவாசு ரோங்கலா மற்றும் லல்லகுடா எலக்ட்ரிக் லோகோ ஷெட்டின் மூத்த கோட்ட மின் பொறியாளர் ஆர்.சந்தோஷ் குமார் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

போட்டியில் அஜ்னி மின்சார இன்ஜின் பணிமனை (மத்திய ரயில்வே), கான்பூர் மின்சார இன்ஜின் பணிமனை, (வடக்கு மத்திய ரயில்வே) மற்றும் விசாகப்பட்டினம் பணிமனை (கிழக்கு கடற்கரை ரயில்வே) ஆகியவை இணைந்து இரண்டாவது பரிசைப் பெற்றன. வதோதரா பணிமனை (மேற்கு ரயில்வே), ஹூப்பள்ளி பணிமனை (தென்மேற்கு ரயில்வே ), தீன் தயாள் உபாத் யாயா பணிமனை (கிழக்கு மத்திய ரயில்வே ) ஆகியவை இணைந்து போட்டியில் 3-வது பரிசை பிடித்தது.

ராயபுரம் மின்சார ரயில் இன்ஜின் விரிவாக மேம்படுத்தப்பட்டதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுநர்களுக்கான வசதி, பாதுகாப்பு, செயல்பாடு என ஒட்டுமொத்த ரயில் சூழலை கணிசமாக மேம்படுத்தியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x