Published : 26 May 2025 06:04 PM
Last Updated : 26 May 2025 06:04 PM
கண்டமனூர்: தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதியில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆறு, அணைகளுக்கான நீர்வரத்தும் உயரத் தொடங்கி உள்ளன.
தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழக கேரள எல்லையில் கடந்த சிலநாட்களாக அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து கனமழையினால் படிப்படியாக அதிகரித்து நேற்று (மே 25) 584 கனஅடியாக உயர்ந்தது.
இந்நிலையில், இன்று (மே 26) காலை 6 மணிக்கு ஆயிரத்து 648 கனஅடியாக உயர்ந்தது. பிற்பகலில் இதன் அளவு 2,000-க்கு மேல் அதிகரித்தது. நீர்மட்டத்தைப் பொறுத்தளவில் ஞாயிறன்று 114.90 அடியாக இருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 116 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் தேனிமாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 2நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணைப்பகுதிகளில் அதிகபட்சமாக 55.8 மிமீ.மழை அளவும், தேக்கடியில் 36.2 மிமீ மழையும் பெய்தது. இதேபோல் சோத்துப்பாறையில் 13 மிமீ. மழை பெய்தது. மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையடிவாரத்தை நோக்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வைகையின் துணை ஆறுகளின் நீாராதாரத்தைப் பொறுத்தளவில் மேற்குத் தொடர்ச்சி மலையையே சார்ந்துள்ளன. தற்போது மலையில் ஏற்பட்ட மழைப்பெருக்கால் கொட்டக்குடி, வராகநதி, சுருளிஆறு, மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதேபோல் மூலவைகையின் முகத்துவாரத்திலும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் சோத்துப்பாறை, வைகைஅணை உள்ளிட்ட அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT