Published : 16 May 2025 06:18 AM
Last Updated : 16 May 2025 06:18 AM
சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வக்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவெக இஸ்லாமியர்களுக்கு துணைநிற்கும். வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு சார்பிலோ எந்த வழக்கையும் தொடுக்கவில்லை.
திமுகவை சேர்ந்த ஒரு சில தனிநபர்கள் வேண்டுமானால் வழக்கு தொடுத்திருக்கலாம். வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை வீட்டில் பூட்டி வைத்து என்ன பயன்? வக்பு விஷயத்தில் திமுக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. தங்களுக்கு லாபம் இருக்கும் விஷயத்தில் மட்டுமே திமுக தலையிடும். வக்பு விஷயத்தில் திமுக துரோகத்தை தான் செய்யும்.
திமுக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. திமுகவினர் ஆளுநரைத்தான் எதிரியாக சித்தரித்து, 4 ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில், மத்திய அரசை நேரடியாக எதிர்த்திருக்கிறார்களா? அமித்ஷாவையும், மோடியையும் எதிர்ப்பதில் அவர்களுக்கு பயம் உண்டு.
வக்பு சொத்துகளை யாரெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய் முடிவு செய்வார். எங்கள் கொள்கைக்கு எதிராக இருப்பவர்களுடனும், திமுகவுடனும் உறவு இருக்காது. அதேபோல, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT