Published : 14 May 2025 04:59 AM
Last Updated : 14 May 2025 04:59 AM
கோவை: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரிடம் புகாரளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானதாலும் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அடுத்த சில நாட்களில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக புது எஃப்.ஐ.ஆர் பதிந்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன்(34), திருநாவுக்கரசு(36), சதீஷ்(35), வசந்தகுமார்(32), மணிவண்ணன்(34), ஹேரன்பால்(34), பாபு(35), அருளானந்தம்(41) மற்றும் அருண்குமார்(35) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ல் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரியிலும், 2-வது கூடுதல் குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் மாதத்திலும் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் நேரடியாக வாக்குமூலம் அளித்தனர். 2023 பிப். 24 முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் மூடப்பட்ட தனி அறையில் நடந்து வந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். இதற்காக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு மகளிர் நீதி மன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். காலை 10.30 மணி அளவில் நீதிபதி நந்தினி தேவி இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர், மதியம் 12 மணிக்கு தண்டனை விவரத்தை நீதிபதி நந்தினிதேவி வாசித்தார். அதில், 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்தார். இத்துடன் தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதமாக விதித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் திரண்டிருந்த மாதர் சங்கத்தினர் தீர்ப்பை வரவேற்று அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, 9 குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பிறழ் சாட்சி அளிக்கவில்லை: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், ஒருவர்கூட பிறழ் சாட்சி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, லேப்டாப், செல்போன், மெமரிகார்டு என எலெக்ட்ரானிக்ஸ் ஆதாரங்கள் மற்றும் 1,500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட தனி அறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 பிப். 24 முதல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 2 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சிபிஐ விசாரணைக்கு நான் உத்தரவிட்டதால்தான் இன்று நீதி கிடைத்திருக்கிறது” என்று
பதில் அளித்துள்ளார்.
யாருக்கு எத்தனை வருடம் தண்டனை: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் குற்றவாளியான (ஏ1) சபரிராஜனுக்கு 4 ஆயுள், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள், சதீஷூக்கு 3 ஆயுள், வசந்தகுமாருக்கு 2 ஆயுள், மணிவண்ணனுக்கு 5 ஆயுள், பாபுக்கு 1 ஆயுள், ஹேரேன்பாலுக்கு 3 ஆயுள், அருளானந்தம் மற்றும் ஏ9 அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT