Published : 13 May 2025 06:00 AM
Last Updated : 13 May 2025 06:00 AM
சென்னை: முக்கிய வழித்தடங்களில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு, ரயில் வேகம் அதிகரிக்கப்படுவதால், சென்னை - பாலக்காடு விரைவு ரயில் உள்பட 4 ரயில்களின் நேரம் ஜூலை 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதுதவிர, முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ரயில்களின் பயண நேரம் குறைகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - பாலக்காடு அதிவிரைவு ரயில் உட்பட 4 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - பாலக்காடுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (22651), திண்டுக்கல் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு பதிலாக, காலை 5.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் ஒட்டம்சத்திரத்தை காலை 6.33 மணிக்கு பதிலாக, காலை 6.01 மணிக்கு அடையும். பழனி ரயில் நிலையத்தை காலை 6.57 மணிக்கு பதிலாக, காலை 6.25 மணிக்கும், உடுமலைபேட்டை நிலையத்தை காலை 7.28 மணிக்கு பதிலாக, காலை 6.58 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை காலை 7.52 மணிக்கு பதிலாக காலை 7.35 மணிக்கு அடையும். பாலக்காடு டவுனை காலை 8.43 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், பாலக்காடு சந்திப்பை காலை 9.30 மணிக்கு பதிலாக காலை 9.15 மணிக்கு அடையும்.
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூருக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (20601), திண்டுக்கல் ரயில் நிலையத்தை காலை 5.57 மணிக்கு பதிலாக 10 நிமிடம் முன்னதாக காலை 5.47 மணிக்கு அடையும். மதுரை ரயில் நிலையத்தை காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 6.40 மணிக்கும், உசிலம்பட்டி நிலையத்தை காலை 7.54 மணிக்கு பதிலாக காலை 7.28 மணிக்கும், ஆண்டிப்பட்டி நிலையத்தை 8.13 மணிக்குபதிலாக காலை 7.48 மணிக்கும், தேனி நிலையத்தை காலை 8.28 மணிக்கு பதிலாக காலை 8.03 மணிக்கும், போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தை காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 8.55 மணிக்கும் அடையும்.
இதுதவிர, பொள்ளாச்சி - கோவைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (56110), மைசூர் - தூத்துக்குடி விரைவுரயில் (16236) நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இயக்ககக் காரணங்களுக்காக, பாலக்காடு டவுன் - கோவை மெமு ரயில் (66606), கோவை சந்திப்பை அடையும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில்களின் நேர மாற்றம் ஜூலை 11-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT