Published : 07 May 2025 08:53 PM
Last Updated : 07 May 2025 08:53 PM
கோவை: “அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (மே 7) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு. தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நாடே துணை நிற்கிறது. காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும். முன்பு ரத்தத்தால் சிவந்த ரோஜாக்கள் தற்போது வெள்ளை ரோஜாக்களாக மலரும்.
தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. சட்ட விரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியதற்கு, மதக் கலவரத்தை தூண்டுவதாக தமிழக அமைச்சர்களும் முதல்வரும் பேசுவது கண்டிக்கத்தக்கது. பிற மாநில முதல்வர்கள் பிரதமருக்கும் ராணுவத்துக்கும் பாராட்டு தெரிவிக்கும்போது, தமிழக முதல்வர் பாராமுகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
திமுக அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வேங்கைவயல் பிரச்சினைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்தும் தீர்வு காணப்படவில்லை. திமுகவினர் நான்காண்டு நிறைவை கொண்டாடும்போது மக்கள் திண்டாடுகிறார்கள்.
அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும். 2026 தேர்தலில் திமுகவின் சந்தர்ப்பவாத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
தாக்குதலில் பெண்கள் முன்னிறுத்தப்பட்டது பிரதமர் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. தீவிரவாத தாக்குதல் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேரமில்லை. 2026 தேர்தலில் மக்கள் இதற்கு பதில் அளிப்பார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT